Saturday, May 30, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 21

அத்தியாயம் - 21 - சைக்கிளில் மாஞ்சாநூல்

  • நீர் மாசுபாடு என்பது, ஏரிகள், ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் என்பன போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் மாறுதல்கள் நிகழ்வதனால் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. இது அந்த நீர் நிலைகளில் வாழும் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

‘‘மணி நாலரை கூட ஆகலை... இப்ப எங்க போறது மல...?’’

‘‘வீட்டுல போய் தூங்கிட்டு ஒன்பது மணிக்கு மேல சைக்கிள் கம்பெனிகள்ல விசாரிப்போம்...’’

சைக்கிளை எங்கேயாவது போட்டு வைத்தால் எப்படி இருந்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று, அதை விற்று விட்டு போயிருக்க வாய்ப்பு உண்டு என்பது அண்ணாமலையின் யூகம். அதனால் சொக்கநாதன் சம்பவம் நடந்த நாளில் இருந்து ஏதாவது பழைய சைக்கிள் விற்பனைக்கு வந்ததா என்று இதுவரை பதினைந்து சைக்கிள் கம்பெனிகளில் விசாரித்து விட்டார்கள். எங்கும் உருப்படியான தகவல் இல்லை.

ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்து சற்று ஓய்ந்து தூறிக் கொண்டிருந்தது. மழைநீர் சாலையை மூடியவாறு பெருக்கெடுத்து ஓடியதால் சாலையில் (?!) சாலை எங்கே இருக்கிறது... பள்ளம் எங்கிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து வாகனங்கள் வளைந்து நெளிந்து நகர்ந்து கொண்டிருந்தன. 

அப்படி மெதுவாக ஊர்ந்து செல்லும்போது கீழவாசல் மார்க்கெட் அருகில் ஒரு சைக்கிள் வாடகைக்கு விடும் கடையின் வாசலுக்கு நேரே தேங்கி நின்றார்.

விநாயகம் சைக்கிள் கடை என்ற பிளக்ஸ் போர்டு தற்போது மழையில் நனைந்ததால் தூசிகள் எதுவுமின்றி பளிச்சென்று இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆயுதபூஜையின் போது புதிதாக வைத்திருக்க வேண்டும். 

கடையின் உள்ளே ஒருவர் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டிக் கொண்டிருக்க, ஸ்டூலில் பனியனுடன் அமர்ந்திருந்த ஒருவர் வலது உள்ளங்கையைச் சுற்றி பேண்டேஜ் போட்டிருந்தார்.

அந்த சைக்கிள் கம்பெனி வாசலில் வரிசையாக கேரியர் இல்லாத ஏழெட்டு சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. செயின் கவரிலும், பின்புற மர்காடிலும் சைக்கிள் கம்பெனியின் பெயரும், நம்பரும் எழுதப்பட்டிருந்தது. மழையில் நனைந்ததால் அவை வாட்டர் வாஷ் செய்து சுத்தமாக இருந்தன. இருக்கைகள் மட்டும் நனையக்கூடாது என்று நீளமான ஒரு பிளக்சை போட்டு அதன் மீது ஆங்காங்கே உடைந்த செங்கற்களை வைத்திருந்தார்கள்.

‘‘என்ன சார்... காத்தடிக்கணுமா...?’’

அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அண்ணாமலை கடையை நோட்டம் விட்டான்.

உள்ளே நான்கைந்து சைக்கிள்கள் இருந்தன. அவை பழுது நீக்கம் செய்வதற்காகவோ அல்லது விற்பனைக்காகவோ வந்திருக்க வேண்டும். 

‘‘இந்த பத்து நாளைக்குள்ள ஏதாவது பழைய சைக்கிள் விலைக்கு வந்துச்சா...’’

‘‘ஏன் சார்... வீட்டுல எதுவும் சைக்கிளை காணோமா...? போலீஸ் ஸ்டேசன் போக வேண்டியதுதானே... நாங்க எல்லாம் பழக்கமில்லாத ஆளுங்க கிட்ட இருந்து சைக்கிளை வாங்க மாட்டோம்... எங்களை சந்தேகப்படாதீங்க சார்...’’ என்று ஸ்டூலில் உட்கார்ந்திருந்த ஆசாமியிடமிருந்து அவசரமாக பதில் வந்தது.

‘‘திருட்டு கேஸ் இல்ல... இது வேற... ஒரு ஆள் வச்சிருந்த சைக்கிளை எங்கயாவது அனாமத்தா விட்டா சந்தேகம் வந்து மாட்டிக்குவாங்க... அதனால கடையில வித்துட்டு போயிருக்கலாமோன்னு ஒரு சந்தேகம்...’’ என்று அண்ணாமலை சொல்லவும்,

‘‘அப்போ நீங்க போலீஸ்தானா...?’’ என்று கேட்டவாறு அவன் எழுந்து வந்தான்.

‘‘ஆமா... உங்க கையில எப்படி காயம்...?’’

‘‘அதுவா சார்... நீங்க இப்போ கேட்டீங்கிளே... போன வாரம் ஒரு சைக்கிள் விலைக்கு வந்தது. ஆயிரத்து அறுநூறு ரூபாய்க்கு வாங்கினேன்.

பேக்வீல்ல ஏதோ மினுமினுப்பா நூல் சிக்கியிருக்குதேன்னு புடிச்சு இழுத்தேன்... சனியன் ஏதோ கண்ணாடி மாதிரி தூளா ஒட்டிகிட்டு இருந்துருக்கும் போலிருக்கு கையை ரணகளமாக்கி இதோ... உடனே கடையை போட்டது போட்டபடி நாங்க ஆஸ்பத்திரிக்கு ஓடிட்டோம்... ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்துதான் சுத்தம் செஞ்சோம்... இந்த இடத்துல தரையைப் பாருங்களேன்... அந்த ரத்தக்கறை இன்னமும் போக மாட்டெங்குது...’’ என்று ஒரு இடத்தை காட்டினான்.

கடைக்குள் முழுவதும் ஆங்காங்கே ஆயில் கறை. அவன் காட்டியது ரத்தக்கறையா, ஆயில் கறையான்னு தெரிஞ்சுக்க ஆய்வுக்கு அனுப்பிதான் முடியும் போல் இருந்தது.

‘‘அந்த சைக்கிள்...?’’ என்று அண்ணாமலை இழுத்தான்.

‘‘இதோ இந்த சைக்கிள்தான் சார்...’’ என்று அவன் காட்டிய இடத்தில் அந்த சைக்கிள் இரண்டாவதாக நின்றிருந்தது. அதன் பின் சக்கரத்தில் நூலின் மிச்சம் சுமார் முக்கால் அடி அளவுக்குதான் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததுமே அது மாஞ்சாநூல் என்பதை அண்ணாமலை கண்டு கொண்டான்.

‘‘யோவ்... அதைப் பார்த்தாலே மாஞ்சாநூல்னு உனக்கு தெரியலையா... அதுகிட்ட போய் வம்பிழுத்து ரத்தப்பலி கொடுத்துருக்க...’’ என்று அண்ணாமலை சகஜமாக பேசினான்.

‘‘சார்... எனக்கு காத்தாடி விட்டு பழக்கம் கிடையாது... நம்ம ஊர் காத்தாடி போட்டியில கூட யாருமே மாஞ்சா நூல் பயன்படுத்த மாட்டாங்க... சோ... அதனால எனக்கு மாஞ்சா நூல் உயிரை பலிவாங்கியது அப்படின்னு சில நாள் சாயந்திர நியூஸ் பேப்பர்ல செய்தி தலைப்பு அளவுக்குதான் தெரியும்...’’

அந்த சைக்கிளின் அருகில் சென்று பார்த்த அண்ணாமலை, ‘‘இந்த சைக்கிளை வாங்கினதுக்கப்புறம் கழுவுனியா?...’’ என்றான்.

‘‘இல்ல சார்... பொதுவா சைக்கிள் விலைக்கு வந்துச்சுன்னா, செட் ஆப் த்ரீ, பாட்டம் செட், கோன் பால்ரசை மாத்தி, சீட் கவர், பிரேம் கவர் எல்லாம் போட்டுதான் நல்ல விலைக்கு வித்துடுவோம்...

இது வந்த அன்னைக்கே என்கிட்ட ரத்தக்காவு வாங்கினதால அதுமேல கோபமாகி அப்படியே போட்டுட்டேன்... இதோ இந்த வாடகை சைக்கிள் கூட குளிச்சு பளபளன்னு இருக்கு பாருங்க... ஆனா இந்த சைக்கிள் வந்ததுல இருந்து அப்படியேதான் இருக்கு...

ஏன் சார்... ஏதாவது கைரேகை கிடைக்குமான்னு பார்க்கப் போறீங்கிளா... அப்படி கிடைக்கிற கைரேகையில என்னோடதையும், என் லேபர் கைரேகையைும் கழிச்சுட்டு மத்ததை கணக்கெடுத்துக்குங்க சார்...’’என்றான்.

அவன் கவலை அவனுக்கு.

கடைக்குள் எல்இடி பல்ப் எரிந்து கொண்டிருந்தாலும் அந்த வெளிச்சம் சரியாக பிரதிபலிக்க முடியாத அளவுக்கு கடைக்குள் ஆங்காங்கே இருட்டும், அழுக்கும் இருந்தது.

போன் லைட்டை ஆன் செய்து கொண்டு அந்த சைக்கிளின் அருகில் சென்ற அண்ணாமலை, ‘‘ஆயுத பூஜைக்கு சுத்தம் செஞ்ச கடையா இது...’’ என்று கேட்டுக் கொண்டே நன்றாக சைக்கிளைப் பார்த்தான்.

‘‘சார்... வெல்டிங் பட்டறை, டூவீலர் ஒர்க் ஷாப், சைக்கிள் கம்பெனி எல்லாம் ஆயுத பூஜை அன்னைக்கு ஒரு ராத்திரிதான் புதுப்பொண்ணு மாதிரி இருக்கும்... மறுநாளே அவ்வளவுதான்...’’

சைக்கிளின் செயின் கவரிலும், போக்ஸ் கம்பியிலும், பின்புற மர்கார்டு அருகில் உள்ள பிரேம் கம்பியிலும் ஏதோ கறை படிந்து போய் இருந்தது. அருகில் சென்று முகர்ந்து பார்த்தான். பால் வாசம்தான் என்பதை புரிந்து கொள்ள சில விநாடிகள் பிடித்தது. 

அண்ணாமலை மோப்பம் பிடிப்பதை பார்த்த சைக்கிள் கம்பெனி ஆள், ‘‘சார்... அதை நானும் மோந்து பார்த்தேன்... ஏதோ பால் சிந்தி காஞ்சு போயிருக்கும் போலிருக்கு...’’

இதுக்கு மேல இந்த சைக்கிள் இங்க இருக்கக் கூடாது என்று முடிவுக்கு வந்து விட்ட அண்ணாமலை, போனில் விறுவிறுவென உத்தரவு பிறப்பிக்க, சற்று நேரத்தில் ஒரு சில காவலர்களும், பாரன்சிக் டிபார்ட்மெண்ட் ஆட்களும் அங்கே வந்து விட்டார்கள்.

பாரன்சிக் ஆட்கள் சைக்கிளின் மீது இருந்த கைரேகைகளை எடுத்துக் கொண்டதும், காவலர்கள் ஒரு குட்டியானை லோடு வேனில் அந்த சைக்கிளை ஏற்றி விட்டார்கள்.

ஏற்றுவதற்கு முன்பு, அந்த சைக்கிளை பல கோணங்களில் படம் பிடித்துக் கொண்டான்.

‘‘சைக்கிளையே கொண்டு போறீங்க... அப்புறம் எதுக்கு சார் படம்...?’’

அப்போது ஒரு காவலர் ஏதோ ஒரு பேப்பரில் எதையோ எழுதி எடுத்து வந்து ‘‘உன் பேர் என்ன...?...’’ என்றார்.

‘‘எதுக்கு சார் கேட்குறீங்க... கேஸ் எழுதப்போறீங்கிளா...?’’

‘‘நாங்க எதுவும் இடைஞ்சல் செய்யக்கூடாதுன்னு நினைச்சாலும் நீங்க ஏன்யா தன்னால வந்து வண்டியில ஏறுறீங்க... உன் கடையில இருந்து இந்த சைக்கிளை கைப்பற்றியிருக்கோம்னு விபரம் எழுதியிருக்கோம்... படிச்சுப் பார்த்துட்டு கையெழுத்து போடணும்... உன் பேரை சொல்லுய்யா...’’.

‘‘நடராஜன்!’’

‘‘அப்போ விநாயகம் யாரு...?’’

‘‘அது எங்க அப்பா சார்... அவர் வெச்ச கடைதான் இது... அவர் உயிரோட இருந்தது வரைக்கும் தினமும் வந்துடுவார்...’’

நடராஜன் கையெழுத்து போட்டு முடித்ததும், ‘‘என்னவோ பழக்கமில்லாத ஆளுங்க கிட்ட சைக்கிளை வாங்க மாட்டோம்னு சொன்ன... இந்த சைக்கிளை வித்தவனை அதுக்கப்புறம் பார்த்தியா...?’’

‘‘ஒயரிங் வேலை பார்த்துகிட்டு இருந்தேன்... இனிமே கோயம்புத்தூர்ல ஒரு இஞ்சினியர்கிட்ட வேலை பார்க்க போறேன்னு சொல்லிதான் வித்துட்டு போனான்.

நானும் அவனை அடிக்கடி காலை, மாலையில இந்த வழியா போறப்ப பார்ப்பேன்... அந்த நம்பிக்கையில வாங்கினேன்... என்ன வில்லங்கம்னு தெரியலையே... எந்த சந்தேகமும் வராத மாதிரி பேசுனானே...’’

‘‘ஏன்... நீ சொன்ன விலைக்கு ஓக்கே சொல்லி சைக்கிளை கொடுத்துட்டு போயிட்டானா...’’

‘‘இல்லை சார்... அப்படி நான் ஆயிரத்து இருநூறு ரூபாய்தான்னு சொன்னதும் ஒத்துகிட்டு இருந்தா எனக்கு இது இவன் சைக்கிள்தானான்னு சந்தேகம் வந்திருக்கும்... ஆனா சொந்த சைக்கிளை விக்கிற மாதிரியே பேரம் பேசில்ல ஆயிரத்து அறுநூறுக்கு கொடுத்தான்... அதனாலதான் நம்பிட்டேன்...’’

‘‘சைக்கிளே ஏன் போட்டோ எடுக்குறேன்னுதானே கேட்ட... உன்கிட்ட இந்த சைக்கிளை வித்தவன், நிச்சயமா ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னால இதே ஊர்ல வேற கடையில வாங்கியிருக்க சான்ஸ் இருக்கு... அதை நாங்க உறுதி பண்ணணும்ல...’’ என்று சொல்லிவிட்டு கிளம்பினான் அண்ணாமலை.

அப்போது நல்லதம்பி, ‘‘அவன் வீடு எங்கன்னு தெரியுமா...? வேற எங்கயாச்சும் பார்த்துருக்கியா...?’’ என்றான்.

‘‘இல்லை சார்...’’ என்ற நடராஜனின் பதிலைக் கேட்டு, ஏமாற்றத்துடன் நல்லதம்பி பைக்கில் ஏறப்போனான்.

‘‘சார்... நான் ஒரு துக்கத்துக்கு போகும்போது அவனை ஒரு தடவை மேலவெளி ராஜாத்தெருவுல பார்த்துருக்கேன்... வீடு இங்கயான்னு கேட்டதுக்கு, பதில் சொல்லாம சிரிச்சுகிட்டே போயிட்டான்... சில பேரு வீடு பந்தாவா சொல்லிக்கிற மாதிரி இல்லன்னா யாரையும் அழைச்சுட்டு போகமாட்டாங்கள்ல... அந்த மாதிரி இவனும் வீட்டைக் காண்பிக்காம போறதா நினைச்சுட்டேன்...’’  இப்போது சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தவன் பேசினான். 

அப்போது அவன் அருகில் சென்று நடராஜன் ஏதோ முணுமுணுக்க, நல்லதம்பி அருகில் வந்து விட்டான்.

‘‘உனக்கு ஏண்டா வேண்டாத வேலை... அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் கூப்பிட்டா உன்னால அலைய முடியுமான்னுதானே காதைக் கடிக்கிற...?’’ என்று கேட்கவும், நடராஜன் முகத்தில் அசட்டு சிரிப்பு.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment