Sunday, May 31, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 22

அத்தியாயம் - 22 - நியூஸ் பேப்பரை கூட ஜெராக்ஸ் எடுத்து வெச்சுக்குவீங்களா...

  • நன்னீர் சேமிப்பு: நீரானது நிலத்தினுள் ஊடுருவி நிலத்தடி நீர்கொள் படுகைகளுக்குள் செல்லக் கூடியது. இந்நிலத்தடி நீர் பின்னர் நீரூற்றுக்கள், வெந்நீரூற்றுக்கள் மற்றும் உஷ்ண ஊற்றுக்கள் வாயிலாக மீண்டும் கிளர்ந்தெழுந்து, மேற்பரப்பிற்கு வரலாம். நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் செயற்கையாகவும் இறைத்துக் கொள்ளலாம். மனிதர்களுக்கும், நிலத்தில் வாழும் ஏனைய உயிர்களுக்கும் நன்னீர் இன்றியமையாததாதலால், இவ்விதமான நீர் சேகரிப்பு மிக முக்கியமான ஒன்று. ஆனால், உலகத்தின் பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையே நிலவுகிறது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

சைக்கிள் கடை பையனிடம் இடத்தைக் கேட்டுக் கொண்டு, மேலவெளியில் உள்ள மேட்டுத்தெருவுக்கு சென்றார்கள். சிறுபிள்ளைகள் ஒழுங்கற்ற வடிவம் கொண்ட கற்களை அடுங்கி வைத்து விளையாடுவார்கள். அதுபோல் வீடுகள் ஒழுங்கற்ற அமைப்பில் இருந்தன. ஓட்டுவீடுகளும், பழங்கால மெட்ராஸ் ஒட்டு மாடிவீடுகளும்தான் அதிகம் இருந்தன.

எலக்ட்ரீசியன் வேலை... சைக்கிள் வைத்திருந்தான்... தற்போது காலி செய்து வெளியூர் போய்விட்டான் என்ற குறிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு விசாரித்தபோது ஒரு சிலரின் பார்வையே சரியில்லை...

ஆனால் இருபது நிமிடத்தில் தகவல் கிடைத்து விட்டது. ஒரு மெட்ராஸ் ஒட்டு கூரை போட்டிருந்த வீட்டின் பின்புறம் ஓடு வேய்ந்து ஒரே ஒரு அறையும், சமையலறையும் மட்டும் கொண்ட சுமார் 200 சதுரடி கொண்ட சிறிய வீடு அது. குடும்பம் வசிக்க போதாது என்பதால் தனி நபருக்கு வாடகைக்கு விட்டிருந்ததாக சொன்னார்.

‘‘வந்து தங்கியிருந்தவன்கிட்ட ஏதாவது அட்ரஸ் ப்ரூப் வாங்கினீங்களா...?’’

இதைக் கேட்டதும் அவர் ஒரு மாதிரியாக பார்த்தார்.

‘‘இது என்ன பார்வை...?’’ அண்ணாமலையின் குரலைக் கேட்டதும், அவர், ‘‘சாரி சார்... நான் அவன்கிட்ட ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுப்பான்னு கேட்டதும் அவனும் இப்படித்தான் என்னைய பார்த்துட்டு, ‘இந்த வீட்டுக்கு போய் ஆதார் கார்டெல்லாம் கேட்குறீங்களா’ன்னு கேட்டுட்டு சின்னதா பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைக்கிற மாதிரியான கவருக்குள்ள இருந்து எடுத்து காண்பிச்சான்... கொடுத்தான்... எடுத்து தர்றேன் சார்...’’

அந்த சிறிய வீட்டுக்குள் எதுவுமே சமையலறையாக தடுத்திருந்த பகுதியில் ஒரு கருங்கல் அம்மியின் அடிப்பகுதி சிமெண்ட் வைத்து பூசப்பட்டிருந்தது. 

‘‘சார்... இது எங்க அம்மா அரைச்ச அம்மி... கொஞ்ச நாள் தனியா இங்கதான் இருந்தாங்க... தரை லேசா மேடுபள்ளமா இருந்ததால எவ்வளவுதான் முட்டுக்கொடுத்தாலும் அரைக்கும்போது அம்மி நொடிச்சுகிட்டே இருந்துச்சு... அதனால சிமெண்ட் போட்டு பூசிட்டேன்... அம்மா போனதுக்கு அப்புறம் யாருக்கும் தேவைப்படலை... எடுக்காம அப்படியே விட்டாச்சு...’’ 

‘‘எவ்வளவுதான் சுத்தி சுத்தி பார்த்தாலும், ஒட்டடை, மண்ணு, தூசியைத் தவிர வேற எதுவுமே இல்லையே...’’

‘‘குடும்பமா இருந்துட்டு போறவங்க செல்ப்புல விரிச்சிருந்த பேப்பர், உடைஞ்ச குவளை அது இதுன்னு எதையாச்சும் போட்டுட்டு போவாங்க... ஆனா, பேச்சுலரா இருந்த பையன் சுத்தமா துடைச்சு எல்லாத்தையும் அள்ளிட்டு போயிருக்கானேன்னு நினைச்சேன்...

களவாணித்தனம் பண்ற பய தடயம் சிக்கிடக்கூடாதுன்னுதான் க்ளீன் பண்ணிட்டு போயிருக்கான்னு இப்பதான் தெரியுது...’’

‘‘ஐயா... அந்த பையனுக்கு என்ன வயசு இருக்கும்...?’’

‘‘என் காலத்துல ஒருத்தரோட வயசை ஈசியா கண்டுபிடிச்சுடுவோம்... இப்ப கண்டதையும் தின்னு கிடைச்சதை எல்லாம் குடிச்சு ஆளே மாறிப் போயிடுறானுங்க... ஒருபயலோட ஒரிஜினல் வயசையும் சரியா கண்டுபிடிக்க முடியலையே...’’

‘‘உங்க கிட்ட பர்த் சர்ட்டிபிகேட்டா கேட்டேன்... யூகமா சொன்னா போதும்...!’’

‘‘இருபத்தஞ்சு இருபத்தேழு இருக்கலாம்...’’

‘‘சார்... நீங்க பார்த்துட்டு வாங்க... நான் போய் அவன் கொடுத்த ஆதார்கார்டு ஜெராக்சை எடுத்துட்டு வர்றேன்...’’ என்று அந்த பெரியவர் வெளியேறினார்.


அம்மிக்கும் சுவற்றுக்கும் இடையில் இருந்த மூன்று அங்குல இடைவெளியில் எதாவது தெரிகிறதா என்று நல்லதம்பி பார்க்க முயற்சித்தான். ஆங்காங்கே சுண்ணாம்புடன் உதிர்ந்து நின்ற பூச்சு நல்லதம்பியின் தலையிலும் கன்னத்திலும் ஒட்டிக் கொண்டது.

‘‘ஏண்டா இவ்வளவு சிரமப்படுற...? மொபைல் கேமராவை ஆன் பண்ணினா என்ன இருக்குன்னு தெரிஞ்சுடப் போகுது...!’’ என்று அண்ணாமலை சொல்லவும்,

‘‘அடச்சே... இப்படி ஒரு யோசனை எனக்கு வராம போயிடுச்சே...’’ என்று மொபைலை எடுத்தான்.

‘‘என்ன சார்... ஏதாவது சிக்குனுச்சா...?’’ என்ற குரல் கேட்கவும் அண்ணாமலை திரும்பிப் பார்த்தான்.

அவர் கையில் இரண்டாக மடிக்கப்பட்ட ஒரு வெள்ளைத்தாள்.

அண்ணாமலை அதை வாங்கி பிரித்துப் பார்த்தான். ஏதோ ஒரு ஆணின் உருவம்... அவ்வளவுதான் அதில் தெரிந்தது.

‘‘அவன் என்கிட்ட காண்பிச்ச கலர் ஆதார் அட்டையில அவன் முகம்தான் இருந்துச்சு... ஆனா ஜெராக்ஸ் சுத்தமா கருப்படிச்ச மாதிரி இருக்கு... இதை வெச்சு ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாது... கவர்மெண்ட் கம்ப்யூட்டர்ல செக் பண்ணினா ஓரளவு கலர்ல உருவம் தெளிவா தெரியலாம்...’’

‘‘தல... இவரை நம்ம டிபார்ட்மெண்ட்ல பார்ட்டைமா சேர்த்துக்கலாமா...?’’ என்ற நல்லதம்பியை பார்த்து அண்ணாமலை முறைக்கவும், வாயை மூடிக் கொண்டான்.

‘‘இருங்க சார்... அன்னைக்கு அவன் என்கிட்ட காட்டின ஆதார்ல இருந்த போட்டோவும் ஜெராக்ஸ்ல இருந்த போட்டோவும் வேற வேறன்னு நினைக்கிறேன்...’’ என்று பெரியவர் புதிய குழப்பத்தை ஏற்படுத்தினார்.

‘‘ஒரிஜினலுடைய ஜெராக்ஸ்தான் இதுன்னு பார்த்து வாங்க மாட்டீங்கிளா...?’’

‘‘சார்... ஒரிஜினலையும், ஜெராக்சையும் உத்துப் பார்த்து வாங்குறதுக்கு நான் என்ன அட்டஸ்டேஷன் பண்ற அதிகாரியா...? முதல்நாள் கலர் கார்டு காட்டுனப்ப கடைசி நாலு நம்பர் 6848ன்னு இருந்துச்சு. மோகன்குமார்னு அவன் பேர் சொன்னதும், விழுப்புரம்னு ஊர் பேரும் நினைவு இருந்துச்சு...

அடுத்த நாள் அவன் கொண்டு வந்த ஜெராக்ஸ்ல 6848 நம்பரைப் பார்த்ததுமே வேற எதையும் பார்க்க தோணலை... இப்படி பிராடா இருப்பான்னு எதிர்பார்க்கலையே...’’

‘‘ஐயா... உங்ககிட்ட வேற ஜெராக்ஸ் இருக்கா...?’’

‘‘இருக்குங்க... எந்த பேப்பரா இருந்தாலும் எதுக்கும் இருக்கட்டுமேன்னு நான் ஒரு ஜெராக்ஸ் எடுத்து வெச்சுக்குவேன்... இப்படி எல்லாம் ஏதாச்சும் வில்லங்கம் வரும்னு எனக்கு அப்பவே தோணுச்சு...’’

‘‘என்ன சாரு வி.கே.ராமசாமி மாதிரியே பேசுறாரு... சரிங்க சார்... நியூஸ் பேப்பரை கூட ஜெராக்ஸ் எடுத்து வெச்சுக்குவீங்களா...’’என்று நல்லதம்பி கேட்டபோது அண்ணாமலை சிரித்து விட்டான். ஆனால் அந்த பெரியவருக்கு உடனடியாக அர்த்தம் புரியவில்லை போலிருக்கிறது. உங்களுக்கும் புரியவில்லை என்றால் முந்தைய பாராவையும் இந்த பாராவின் முதல் பாதியையும் மீண்டும் படிக்கவும்.

அவருக்கு புரிந்தபோது வாசலில் புல்லட் ஸ்டார்ட் ஆகி செல்லும் சத்தம் கேட்டது.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment