Saturday, May 9, 2020

இந்தியன் - 24 ஆண்டுகள்

09 மே 1996 - இந்தியன் தமிழ் திரைப்படம் வெளியான நாள்.


இந்தியன் திரைப்படத்தின் திரைக்கதை அன்றும் இன்றும் - ஒரு ரசிகனின் பார்வை...

படம் வெளிவந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் கதையைப் பற்றி நான் சொல்வதற்கு புதிதாக ஒன்றுமில்லை. அதனால் அந்த படத்தைப் பற்றி சில தொழில்நுட்ப விபரங்களையும், இன்றைக்கு இதே போன்ற ஒரு படம் வந்தால் எந்த அளவு வெற்றி பெறும் என்று எனக்கு தோன்றிய சில சிந்தனைகளையும் இங்கே பதிவு செய்கிறேன்.

மூன்று மணிநேரமோ அல்லது மூன்று மணிநேரம் மற்றும் ஐந்து நிமிடங்கள் (185 நிமிடங்கள்) ஓடக்கூடிய பெரிய திரைப்படம் இது. இந்தப் படத்தின் இடைவேளை வரை ஓடும் நேரம்தான் இப்போது முழு படங்களே வருகின்றன.

அந்தப்படத்தில் பாடல்காட்சிகள், மனிஷா கொய்ராலா நடித்த காட்சிகள், செந்தில், கவுண்டமணி, மனிஷா கொய்ராலா மூவருக்கும் உரிய காம்பினேஷன் காட்சிகள் ஆகியவற்றை தவிர்த்துப் பார்த்தால் இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய படமாகத்தான் இது இருக்கும்.


இந்த படம் வெளியானதற்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பு 1995 தீபாவளிக்கு கமல்ஹாசன் நடித்த குருதிப்புனல் வெளியானது. இந்த படத்தின் இறுதியில் கமல்ஹாசன் கதாபாத்திரம் ரகசிய உளவாளியால் சுடப்பட்டு இறப்பதாக காட்சி இருக்கும். கதைக்கு அது அவசியம் என்றாலும் படம் முழுவதும் ஒருவித இறுக்கமான கதையோட்டத்துடன் இருந்ததால் அன்றைய ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடவில்லை.

ஜென்டில்மேன், காதலன் ஆகிய படங்களின் பிரமாண்ட இயக்கத்தினால் ஷங்கர் மீது இருந்த எதிர்பார்ப்பும் இந்தப்படத்தைக் காண ரசிகர்கள் நம்பிக்கையுடன் திரை அரங்கத்திற்கு வரவழைத்தது. படத்தின் டைட்டில் எழுத்துக்கள் கூட படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது என்பதை மறுக்க முடியாது. என்னுடைய பதின்ம வயதுகளில் இந்த படத்தை அவ்வளவு ஆர்வத்துடன் பார்த்திருக்கிறேன். 

அதே நேரத்தில் இந்தியன் படத்தில் தந்தை கமல்தான் மகன் கமல் கதாபாத்திரத்தை கொலை செய்கிறார் என்றதும் ஏற்றுக் கொண்டார்கள். அதாவது அன்றைய ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் எந்த காரணத்துக்காகவும் கதாநாயகன் இறந்து விடுவதையோ தோற்றுப்போவதையோ விரும்பவில்லை என்ற மன நிலையில் இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியன் படத்திற்கு இன்றைய காலகட்டத்தில் திரைக்கதை எழுதினால் நிச்சயமாக பாடல் காட்சிகளும், கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை காட்சிகளில் சிலவற்றை தவிர்த்துதான் எழுத வேண்டியிருக்கும். ஏனெனில் இன்றைய ரசிகர்களின் மனநிலை சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டுப்போ என்ற அளவில் வந்து விட்டது.

அதாவது படத்தின் இறுதிக்காட்சியில் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் ஒரே பிரேமுக்குள் நின்று சிரித்தபடி வணக்கம் போட்டால்தான் படம் முடிந்தது என்பதை ஒப்புக் கொண்ட ரசிகர்கள் பிறகு பல்வேறு விஷயங்களில் மாறுதல்களை ஏற்றுக் கொண்டார்களே அப்படித்தான்.

இன்னொரு முக்கிய விஷயம் இந்த படத்தின் கிளைமேக்ஸ் பற்றி பேச வேண்டியதாக இருக்கிறது. முன்பெல்லாம் படத்தின் வில்லன் திருந்தவே வாய்ப்பில்லை... அதனால் கதாநாயகன் அந்த வில்லனை கொலை செய்து பழிதீர்த்தால்தான் ரசிகனுக்கு திருப்தி ஏற்பட்டது. அந்த அடிப்படையில்தான் இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்குபவர்களை தாத்தா கொலை செய்ததாக அமைக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சுஜாதா கூட ஒரு நேர்காணலில் "இந்தியன் கதை விவாதத்தின் ஆரம்பத்திலேயே மகன் கமலை கதாபாத்திரத்தை சாகடிப்பது என்று முடிவு செய்து விட்டதாகவும், அதற்கான காரணத்தை எப்படி சொல்லி மழுப்பப் போகிறோம் என்பதைப் பற்றிதான் அதிகம் யோசித்து விவாதித்தோம்" என்று சொல்லியிருந்தார்.


நம் நாட்டில் இப்போதும் லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டுமின்றி, அநியாய விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் தனியார்களைக் கூட எதிர்த்து கேள்வி கேட்க இயலாத நிலையில்தான் வாழ்ந்து வருகிறோம்.

இன்றைய இளைய தலைமுறையினரும், படைப்பாளிகளும் லஞ்சம் போன்ற தவறுக்கு காரணம் என்ன... இந்த லஞ்சப் பணத்தில் எதாவது வாங்கி வரும்போது அவனது குடும்பமே புறக்கணித்தால் அவன் ஏன் லஞ்சம் வாங்கப் போகிறான்.

பாதி லஞ்சம் வாங்குபவனின் சிற்றின்பத்துக்கு செலவழிகிறது என்றால் மீதி பணம் அவனது குடும்ப உறுப்பினர்களின் ஆடம்பர நுகர்வு கலாச்சாரத்துக்குதானே செலவாகிறது. ( பல நேரங்களில் கல்வி கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட இந்த பணத்தை செலவழிப்பவர்கள் உண்டு.) இதை மாற்றினால் லஞ்சம் குறையுமா என்பது போன்று சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்.

அது மட்டுமின்றி கொலைக்குகொலை தீர்வு அல்ல... பிரச்சனையை வேர் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதை சரி செய்ய வேண்டும். அன்புதான் பிரதானம்... எதற்கும் வன்முறை சரியான வழிமுறை ஆகாது என்ற எண்ணங்கள் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் மட்டுமல்ல... முக்கியமாக பல திரைப்பட இயக்குநர்கள், கதாநாயகர்களுக்கும் வந்து விட்டது. அதன் பிரதிபலிப்பை கடந்த ஒரு சில ஆண்டுகளாக ஒன்றிரண்டு திரைப்படங்களில் பார்த்து வருகிறோம்.

இப்போது வரும் படங்களில் ஒரு கதாபாத்திரத்தின் அனைத்து செயல்களையும் படத்தில் காட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்ற அடிப்படையில் காட்சிகள் அமைக்கிறார்கள்.


இந்தியன் படத்தில் ஊர்மிளா கதாபாத்திரம், அவரது வீட்டில் கமல் எடுபிடி வேலை பார்ப்பது கதைக்கு தொடர்பாக இருக்கிறது. ஆனால் மனிஷா கொய்ராலா கதாபாத்திரம், பொன்னம்பலத்துடன் சண்டை, மனிஷா கொய்ராலாவிடம் செந்தில் குட்டு வாங்குவது உள்ளிட்ட காட்சிகள் அன்றைய ரசிகர்களின் மனநிலையை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் என்பது தெரிகிறது.

ஆக ஒரு படைப்பாளி எந்த மாதிரியான படம் எடுக்கிறார் என்பதை படத்தின் பட்ஜெட்டும் படம்பார்க்கும் ரசிகர்களும்தான் பெருமளவில் தீர்மானிக்கிறார்கள் என்பது என்னுடைய பார்வை.

No comments:

Post a Comment