Wednesday, May 13, 2020

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - 25 ஆண்டுகள்

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் ஊரெல்லாம் உன் பாட்டு என்ற வகையில் ஒரே ஒரு படம் மட்டும்தான் வெளியாகிறது. எல்லாம் மார்க்கெட்டிங்.


ஆனால் 1995ஆம் ஆண்டு பொங்கலுக்கு எட்டு படங்கள் வெளியாகி உள்ளன.

பாட்ஷா - ரஜினிகாந்த்
சதிலீலாவதி - கமல்ஹாசன்
கருப்புநிலா - விஜயகாந்த்
எங்கிருந்தோ வந்தான் - சத்யராஜ்
கட்டுமரக்காரன் - பிரபு
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - பாக்யராஜ்
நான் பெத்த மகனே - நிழல்கள் ரவி
வேலுச்சாமி - சரத்குமார்

இவற்றில் இன்றைக்கும் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் பாட்ஷா படத்தைப் பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை.

ஒரே ஒரு அரண்மனையில் மிகக் குறைவான கதாபாத்திரங்களுடன் இளையராஜா இசையமைப்பில் கே.பாக்யராஜ் கதா நாயகனாக நடித்து இயக்கிய படம் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி.


வரிசையாக பிச்சை எடுத்துக் கொண்டே வருபவர் பாக்யராஜிடம் மட்டும் கேட்பதில்லை. அதற்கு காரணம் அவரிடமே பாக்யராஜ் 350 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார் என்ற சொல்லப்படும்போதே அந்த கதாபாத்திரத்தின் நிலை விளக்கப்பட்டு விடுகிறது.

படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளில் பாக்யராஜின் குடும்ப நிலை என்ன, அவர் பாட்டி காணும் கனவு என்ன? கோடீஸ்வரியான மீனா, ஏழை மணாளனை தேர்வு செய்யும் முடிவுக்கு ஏன் வருகிறாள் என்பது போன்ற கதையோட்டத்திற்கு தேவையான முக்கிய விசயங்களை பார்வையாளர்களுக்கு ஒரு சில காட்சிகளிலேயே (சுமார் 20 நிமிடங்களுக்குள்) உணர்த்தப்படுகிறது.

அதிலும் முதல் நான்கு நிமிடங்களுக்குள் பாக்யராஜின் பொருளாதார நிலை என்ன, அவரது வீட்டில் அவருக்கு கிடைக்கும் மரியாதை, அவரது அண்ணன்கள், அண்ணிகள் நடத்தும் விதம், பாட்டியின் பாசம் ஆகியவற்றை பிச்சைக்காரர் கதாபாத்திரம் வாயிலாக விவரித்திருப்பார். அந்த காட்சிகள் சேனல்களில் இந்த படத்தைப் பார்க்கும்போது இருப்பதில்லை.

சரி, தொலைக்காட்சியில் போடும்போதுதான் விளம்பரத்திற்காக கட் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்... அந்த சேனலின் டிஜிட்டல் தளத்தில் கூட காட்சிகள் துண்டிக்கப்பட்ட வடிவத்தைதான் வைத்திருக்கிறார்கள். சந்தாதாரர்கள் நினைத்த நேரத்தில் நிறுத்தி கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கும் வசதியுடன் இருக்கும் இடத்திலாவது முழு படத்தையும் வைக்கலாமே?

இதை எதற்காக இங்கே சொல்கிறேன் என்றால், தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை திரைக்கதைக்கு சிறந்த உதாரணமாக சொல்வது பாக்யராஜ் அவர்களைத்தான். இப்போதும் திரைக்கதை குறித்து பயிற்சி வகுப்பு எடுப்பவர்கள் பாக்யராஜ் திரைக்கதை எழுதிய படங்களை உதாரணமாக சொல்லாமல் இருப்பதில்லை.

அப்படி இந்த படத்தையும் பரிந்துரைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்... திரைக்கதை அமைப்பு குறித்த ஆய்வுக்காக பார்ப்பவர்களுக்கு திரைக்கு வந்த முழு படமும் காணக்கிடைத்தால்தானே நன்றாக இருக்கும். அதனால்தான் இந்த தகவலை கூறியுள்ளேன்.

படத்தில் நான்கு பாடல்கள் மெலோடி வகை, இரண்டு பாடல்கள் மட்டுமே அதிரடி இசையுடன் உள்ளவை. ஒரே ஒரு சண்டைக்காட்சி. மற்றபடி நகைச்சுவை இழையோட தெளிவான திரைக்கதை. இவ்வளவுதான். படம் விமர்சகர்கள் மொழியில் சூப்பர் டூப்பர்ஹிட் இல்லை என்றாலும் என்றாலும், ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றவர்களின் படங்களுடன் வெளியாகி நல்ல வரவேற்பையும் அருமையான வெற்றியையும் பெற்ற படம். இப்போதும் இந்த படத்தை தொலைக்காட்சியில் அலுப்பில்லாமல் பார்க்க முடிகிறது.

மூன்று வாரங்கள் வரை ரஜினி படத்திற்கு டிக்கட் விலை குறையவில்லை என்பதால் படம் வெளியான ஒரு வாரத்திலேயே இன்னொரு தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பார்த்தபோது மன நிறைவு அளித்தபடம்.


சுவாமி படத்திற்கு போடுவதற்காக பாக்யராஜ் பூ வாங்கிக் கொடுக்கும்போது மீனா ஆசையுடன் தலையில் சூடிக் கொள்ளும் காட்சி, மீனா யார் என்ற உண்மை தெரிந்த லிவிங்ஸ்டன் திட்டமிடும் வில்லத்தனமான காட்சிகளை நகைச்சுவையாக படமாக்கிய விதம், பாக்யராஜின் பாட்டி கதாபாத்திரத்தை சுவாரஸ்யமாக உருவாக்கியிருந்தது என்று திரைக்கதை மற்றும் இயக்கத்திற்காகவும் வழக்கம்போல் பாராட்ட வைத்த பாக்யராஜ் படம் இது.

படம் வெளிவந்த காலகட்டத்தில் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் வராத காலம் என்பதால் இந்த படம் நல்ல வெற்றி பெற்றிருக்கிறது என்று சிலர் சொன்னாலும் நல்ல பொழுதுபோக்கு படங்கள் என்ற பட்டியலில் இதையும் வைக்கலாம்.


No comments:

Post a Comment