Tuesday, May 12, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

அத்தியாயம் - 3 - இஞ்சி டீ... சுக்கு காபி...


  • மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான குடிநீர் இன்றியமையாதது. பல்வேறு வேதியற் பொருட்களின் கரைப்பானாகவும், தொழிற்சாலைகளில் குளிர்ப்பி (கூலிங்) மற்றும் கடத்தியாகப் பயன்படுத்தப்படுவதாலும், உலக வர்த்தகத்தில் நீர் முக்கிய பங்காற்றுகிறது. தோராயமாக 70 சதவீத நன்னீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.-

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

ராமலிங்கம் இந்த செய்தியைக் கேட்டு அப்படியே உட்கார்ந்து விட்டார்.

சொக்கநாதனை கொலை செய்யுற அளவுக்கா எதிரிங்க இருந்தாங்க... அப்படி எதுவும் பகை இருந்துருந்தா, இத்தனை வருசமா தினமும் அதிகாலையில எழுந்து ஆள் அரவமில்லாத ரோட்டுல நடைபயிற்சிக்கு வந்துருப்பாரா?... யாரு இப்படி செஞ்சாங்கன்னு தெரியலையே...

பாடி வந்தது தெரிந்த பிறகு கூட்டத்தோடு கூட்டமாக சென்று பார்த்து விட்டு வரலாம். இப்போ வேலையை பார்ப்போம் என்று ராமலிங்கத்தால் இந்த செய்தியை கடந்து போக முடியவில்லை.

அவருக்கும் சொக்கநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்ட அந்த அனுபவங்கள் அவ்வளவும் இந்த ஒரு நொடியில் நினைவுக்கு வந்து விட்டன.

ராமலிங்கத்தின் டீக்கடை முகப்பில் இரண்டு ஷட்டர் கதவுகள். ஒரு வாசலை டீக்கடையாகவும், மற்றொரு வாசலை பெட்டிக்கடையாகவும் நடத்தி வந்தார்.

பெட்டிக்கடையை ராமலிங்கத்தின் உறவுக்கார பையனான குருநாதன் கவனித்து வந்தான். அவன் ராமலிங்கம் வீட்டு மாடியில் உள்ள கீற்று வேய்ந்த அறையில்தான் தங்கயிருந்தான்.

இவர் காலை 5 மணிக்கே டீக்கடையை திறந்து விட்டாலும், பெட்டிக்கடையை கவனிக்க குருநாதன் காலை 7 மணிக்குதான் வருவான். அதிகாலையில் ஒரு ஆளே சமாளித்துக் கொள்ளலாம் என்பதால் ராமலிங்கமும் அப்படியே விட்டு விட்டார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சொக்கநாதன் வசந்தம் நகரில் வீடு கட்டி குடி வந்த நாள் முதல் நடைபயிற்சிக்காக வருவார். ஆரம்பத்தில் ஒரு சில நாட்கள் செய்தித்தாள் மட்டும் வாங்கிக் கொண்டு திரும்பி வீட்டுக்கு நடக்கத் தொடங்கி விடுவார்.

ஒரு வாரம் ஆன பிறகு ‘‘சார்... டீ போடட்டுமா...?’’ என்று கேட்டார்.

‘‘நான் இந்த டீ, காபி சாப்பிடுறதில்லை... நாட்டு சர்க்கரை இல்லன்னா கருப்பட்டி போட்டு இஞ்சி டீ குடிப்பேன். அது உங்ககிட்ட கிடைச்சா குடிக்கிறேன்...’’ என்றார்.

ஒரு சிலர், டீ போடட்டுமா என்று கேட்டால் எனக்கு டீ, காப்பி பழக்கம் இல்லை என்றோ, அல்லது நான் வீட்டில் மட்டும்தான் குடிப்பேன் என்றோ சொல்லிவிட்டுச் செல்வார்கள்.

ஆனால் சொக்கநாதன், தனக்கு என்ன தேவை என்பதை தெளிவாக கேட்டது ராமலிங்கத்திற்கு பிடித்திருந்தது.

‘‘இங்க அதெல்லாம் ஓடாதுங்க... உங்க ஒருத்தருக்காக அதை எல்லாம் தயார் செஞ்சு வச்சுட்டா கட்டுபடியாகணுமே...’’ என்ற ராமலிங்கத்தின் குரலில் இழுவை.

‘‘ஏன் நான் மட்டும்தான் இஞ்சி டீ கேட்பேன்னு நீங்களா முடிவெடுக்குறீங்க?... அதுக்கான ஏற்பாடுகளை செய்துட்டு ஒரு அட்டையில எழுதி தொங்க விடுங்க... இது கிடைக்குதுன்னு தெரிஞ்சாதானே கேட்பாங்க... எல்லாத்துக்கும் ஒரு விளம்பரம் வேணும்... விளம்பரம்னா பேப்பர், டி.வியில கொடுக்க சொல்லலை... நீங்க அட்டையில எழுதி தொங்க விடுறதே விளம்பரம்தான்...’’ என்றார் சொக்கநாதன்.

அப்போதுதான் வருமானத்தை அதிகரிக்க இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்பதை ராமலிங்கம் உணர்ந்தார்.

‘‘நாளைக்கே நம்ம கடையில உங்களுக்காக இஞ்சி டீ தயாரா இருக்கும் சார்...’’ என்ற ராமலிங்கத்தின் குரலில் உற்சாகம் தெரிந்தது.

‘‘என்னுடைய யோசனையை பரிசீலனை செஞ்சதுக்கு நன்றி... ஆனாலும் உங்க கடையில டீ குடிக்கிறதைப் பத்தி யோசிக்கணும்...’’ என்றார் சொக்கநாதன்.

‘‘இன்னும் என்ன சார் பிரச்சனை?...’’ என்ற ராமலிங்கத்தின் குரலில் சலிப்பு.

‘‘வருத்தப்படாதீங்க ஐயா... இங்க சுத்தியும் நிறைய வீடுகள்தான் இருக்கு... அந்த ரோட்டுல கொஞ்ச தூரம் போனா பள்ளிக்கூடம்... இந்த ரோட்டுல கோயில்... அடுத்த ரோட்டுல மருத்துவமனை, நூலகம்... இப்படி மக்கள் மனதுக்கும், உடலுக்கும் நல்லது செய்யுற விஷயங்கள் இருக்கு.

உங்க கடையில கூட உணவுப்பண்டம் விற்பனை செய்யுறீங்க... அதே நேரம்... பெட்டிக்கடையில சிகரெட், பீடி, புகையிலைப்பொருட்களை வியாபாரம் செய்யுறீங்க...

சிகரெட், புகையிலை பொருட்கள் வாங்க வர்றவங்களாலதான் டீ வியாபாரம் நடக்குதுன்னு உங்ககிட்ட தப்பான நம்பிக்கை இருக்குன்னு நினைக்கிறேன்.

முதல்ல அப்படி நீங்க நம்புறத விட்டுட்டு யோசிங்க... மக்களுக்கு நல்லதை கொடுத்து நல்லவிதமா சம்பாதிக்க நிறைய வழிகள் கிடைக்கும்...

நான் உங்களை கட்டாயப்படுத்தலை. எதை வச்சு வியாபாரம் செய்யுறதுன்னு முடிவு செய்ய வேண்டியது உங்க உரிமை.

எந்த கடையில எதை வாங்கணும்னு முடிவெடுக்குறது என் உரிமை...’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

ஆனால் சொக்கநாதன் சென்ற பிறகும் வெகு நேரம் அவரது வார்த்தைகள் ராமலிங்கம் மனதில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

‘‘ராமலிங்கம் யாருய்யா...’’ என்ற அதட்டலான குரலைக் கேட்டதும்தான் சுயநினைவுக்கு வந்தார்.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9


No comments:

Post a Comment