Wednesday, May 13, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

அத்தியாயம் - 4 - பத்து மணிக்கு ஸ்டேஷனுக்கு வா...


  • இயல்பான தட்ப வெட்ப சூழ்நிலையில் நீரானது சுவையற்ற, மணமற்றதொரு திரவமாகும். குறைந்த அளவுகளில் நீர் நிறமற்று தோன்றினாலும், நீரும் பனிக்கட்டியும் உள்ளார்ந்த வெளிர் நீல நிறத்தை உடையவை. பனிக்கட்டி நிறமற்றதாகவும், நீராவி வாயு வடிவத்தில் இருக்கும் போது கண்ணுக்குத் தெரியாததாகவும் இருக்கிறது. நீர் தெள்ளத் தெளிந்த வண்ணம் இருப்பதால் நீர்த் தாவரங்கள் சூரிய ஒளியைப் பெற்று நீருக்குள்ளேயே வாழ முடிகிறது. நீர் புறஊதா (அல்ட்ரா வயலட்) கதிர் வீச்சை கிரகிக்கும் தன்மையுடையது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

ராமலிங்கம் தூக்கத்திலிருந்து எழுந்தவரைப்போல் கண்களைக் கசக்கிக் கொண்டு எதிரில் பார்த்தபோது, காவலர்கள் இரண்டு பேர் நின்றிருந்தார்கள்.

வாசலில் பால்வியாபாரியையும் காணவில்லை. அவனது வண்டியையும் காணவில்லை. பக்கத்தில் திரும்பி பார்த்தார். முண்டாசு ஆசாமியையும் காணவில்லை. மேசையின் மீது பத்து ரூபாய் நாணயம் மட்டும் இருந்தது.

காவலர்கள் வருவதைப் பார்த்ததுமே அவர்கள் நழுவியிருக்க வேண்டும்.

‘‘யோவ்... காலையிலேயே கடையை திறந்து வெச்சுட்டு தூங்குற...? நீதானே ராமலிங்கம்...?’’என்று ஒரு காவலர் மீண்டும் கேட்ட விதத்திலேயே அவரது குணம் புரிந்தது.

இப்போது எழுந்து நின்று, ‘‘ஆமாங்க...’’ என்றார்.

‘‘வசந்தம் நகர்ல நடந்த மேட்டர் தெரியுமா?...’’

‘‘கொஞ்ச நேரம் முன்னாலதான் பால் வியாபாரி ஒருத்தர் சொல்லிட்டு போனாரு... அவ்வளவு நல்ல மனுஷன் சார் அவரு... அவரைப்போய் இப்படி செய்ய எந்த படுபாவிக்கு மனசு வந்துச்சோ தெரியலை...’’ என்று மனதில் இருந்த ஆதங்கத்தை வார்த்தைகளில் வெளியிட்டார்.

‘‘அந்த ஏரியாவுல விசாரிச்சா, பொழுது விடியுறதுக்கு முன்னால வாக்கிங் போற ஒரே ஆள் அவர் மட்டும்தான். அதுவும் உன்னோட டீக்கடைக்குதான் வந்துட்டு திரும்புவார்னு யாரைக் கேட்டாலும் சொல்றாங்க...

இதுவரைக்கும் விபத்துன்னுதான் நினைச்சுகிட்டு இருந்தோம்... நீ என்னடான்னா, எந்த பாவிக்கு இப்படி செய்ய மனசு வந்துச்சோன்னு புலம்புற...

யாரோடயாச்சும் சேர்ந்து ஏதாச்சும் பிளான் பண்ணியிருந்தியா?...’’ என்று அந்த காவலர் குற்றப்பத்திரிக்கை வாசிக்கவும், ராமலிங்கத்திற்கு உதறல் எடுத்தது.

‘‘அய்யோ... சார்... நீங்க பாட்டுக்கு ஏதேதோ பேசுறீங்க... பத்து வருசமா தினமும் காலையில வந்துட்டுப் போற ஆள் சார் அவரு...

காலையில ஆம்புலன்ஸ் போனப்பவே யாருக்கு என்னாச்சோன்னு சங்கடமா இருந்துச்சு... சொக்கநாதன் சாரும் வழக்கமா வர்ற நேரத்துக்கு காணலையே... அவர் வந்தா, ஆம்புலன்ஸ் எதுக்காக போனதுன்னு கேட்கலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.

ஆனா, சொக்கநாதனைத்தான் யாரோ கழுத்தறுத்து போட்டுருக்காங்கன்னு வழக்கமா அந்த பக்கம் லயனுக்கு போற பால்வியாபாரி சொன்னார். அதைக் கேட்டதும் பதறிப்போய், அவரைப் பத்தி நினைச்சுகிட்டு இருந்தப்பதான் நீங்க வந்து நிக்கிறீங்க சார்...’’ என்று தனக்கு நடந்த சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என்று சத்தியம் செய்யாத குறையாக பதில் சொன்னார்.

‘‘சரிய்யா... பத்துமணிக்கு ஆர்2 ஸ்டேஷனுக்கு வந்து சொக்கநாதன் சாரைப் பத்தி உனக்கு தெரிஞ்ச விசயத்தை சொல்லிட்டு வந்துடு. இன்ஸ்பெக்டரும் விபரத்தை கேட்டுகிட்டு அனுப்பிடுவார்... பயப்படாம வந்துட்டு போ... இது ஒரு சம்பவம் நடந்தா பாதிக்கப்பட்டவங்களோட குடும்பம், சொந்தக்காரங்க, நண்பர்கள்னு எல்லார்கிட்டயும் வழக்கமா நடக்குற சாதாரண விசாரணைதான்...’’ என்று முரட்டுக்குரலில் மிரட்டி விட்டு நகர்ந்தார்கள்.

களவாடினவன் கிடைக்கலைன்னா கம்ப்ளைண்ட் கொடுக்கப் போனவனை களவாணின்னு புடிச்சு உள்ற போட்டுருவாங்க...’ என்ற வசனம் இடம் பெற்ற காட்சி டிவியில் அடிக்கடி ஒளிபரப்பாகும்.

ராமலிங்கத்திற்கு இப்போது அந்த காட்சி ஒளிபரப்பாகாமலேயே நினைவுக்கு வந்து நின்றது.

பொதுவாக காவல்நிலையம், காவலர்கள் என்றாலே தப்பு செய்வதை தொழிலாக வைத்திருப்பவர்களுக்குதான் பயம் வர வேண்டும். நாட்டு நடப்பு பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. அவர்கள் ஏதோ பஸ் ஏறி உறவினர் வீட்டுக்கு செல்வது போல் இயல்பாக இருக்கிறார்கள்.

அடிக்கடி காவல்துறை உயர் அதிகாரிகள் காவல்துறை உங்கள் நண்பன் என்று எவ்வளவோ விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.


உண்மையிலேயே காவல்துறையினர் நல்ல குடிமகனுக்கு நல்ல நண்பனாக நடந்து கொள்வது என்பது விதிவிலக்காகத்தான் இருக்கிறது. இந்த நிலை தொடரும் வரை ராமலிங்கம் மாதிரியான ஆட்கள் காவல்நிலையம் செல்ல வேண்டும் என்றாலே அஞ்சி நடுங்க வேண்டியதுதான்.

இன்று காலையில் கடை திறந்ததுமே விரும்பத்தகாத செய்தி வந்து சேர்ந்ததும் இன்றைய பொழுது அவ்வளவுதான் என்ற எண்ணம் ராமலிங்கத்தின் மனதில் உருவானது.

அதற்கு வலு சேர்க்கும் வகையில் சிறிது நேரத்திலேயே காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு.

அவர்கள் பத்துமணிக்குதான் வர சொன்னார்கள். எட்டு மணிக்கு சூடு பிடிக்கும் வியாபாரம் பகல் பதினொன்றரை மணி வரை டீ குவளையை கீழே வைக்க நேரம் இருக்காது. எப்படி அடுப்பை அணைச்சுட்டு போறது என்று குழம்பியிருந்தார் ராமலிங்கம்.

அந்த அளவுக்கெல்லாம் நீ கவலைப்படத்தேவையில்லை என்று சொல்வது போல், வழக்கமாக கடைக்கு வரும் ஒருவரையும் அதன்பிறகு காணவில்லை.

காவலர்கள் ராமலிங்கத்தை காவல்நிலையம் வரச்சொன்ன செய்தி தீயை விட வேகமாக பரவியிருக்க வேண்டும்.

அதனால்தான், ‘நமக்கு ஏன் வம்பு... இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடணும்...’ என்று ஒதுங்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

அரசுப் பேருந்துகளில், ‘எரிபொருள் சிக்கனம்... தேவை இக்கணம்...!’ என்று ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர் ராமலிங்கத்தின் மனக்கண்களில் தெரிந்தது. உடனே கேஸ் அடுப்பை அணைத்து விட்டார்.

அப்போது பெட்டிக்கடையை பார்த்துக்கொள்ள வந்த குருநாதன், சேனலை மாற்றினான்.

அடுத்ததாக வந்தது ஒரு செய்தித்தொலைக்காட்சி.

‘‘தஞ்சை கல்லூரி பேராசிரியரும் அறிவியல் ஆராய்ச்சியாளருமான சொக்கநாதன் கழுத்தில்...’’

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9


No comments:

Post a Comment