Thursday, May 14, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

அத்தியாயம் - 5 - புகார் கொடுக்கணும்னா உள்ள போங்க...


  • நீர் ஒரு வலிமையான கரைப்பான் என்பதால் அது உலகளாவிய கரைப்பான் என குறிப்பிடப்படுகிறது. நீரில் கரையும் பொருட்கள், எ.கா. உப்புக்கள், சர்க்கரைகள், அமிலங்கள், காரங்கள், சில வாயுக்கள்-குறிப்பாக ஆக்சிசன் வாயு, கரியமில வாயு (கார்பனேற்றம்) போன்றவை நீர்நாட்டமுள்ள (ஹைட்ரோஃபிலிக்) பொருட்கள் எனவும், நீரில் சரிவரக் கரையாத பொருட்கள் (எ.கா.கொழுப்புக்கள் மற்றும் எண்ணெய்கள்) நீர் வெறுப்புள்ள (ஹைட்ரோஃபோபிக்) பொருட்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. புரதங்கள், டிஎன்ஏ, கூட்டுச்சர்க்கரைகள்(பாலிசேக்கரைடுகள்) உட்பட செல்களின் அனைத்து கூறுகளும் நீரில் கரையக் கூடியவை.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

‘‘தஞ்சை கல்லூரி பேராசிரியரும் அறிவியல் ஆராய்ச்சியாளருமான சொக்கநாதன் கழுத்தில்...’’ என்று பிளாஷ் நியூஸ் ஓடும்போதே குருநாதன் அடுத்த சேனலை மாற்றிவிட்டான்.

‘‘டேய்... அந்த சேனலை வையிடா...’’ என்று ராமலிங்கம் அலறினார்.

‘‘மாமா இந்த மாதிரி ஒருநாளும் பேசியதில்லையே...’’ என்று குழம்பிய குருநாதன்அடுத்தடுத்து பொத்தான்களை அமுக்கஇரண்டு மூன்று சேனல்களில் ராசிபலன்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

‘‘டேய்... அந்த நியூஸ் சேனலை வையிடா...’’ என்று மீண்டும் கத்தினார்.

இப்போது வேறொரு நியூஸ் சேனல் ஓடிக்கொண்டிருந்ததுஅதிலும் சொக்கநாதனைப் பற்றிய செய்திதான்.

அதில் பேசிய காவல் ஆய்வாளர், ‘‘தயவு செஞ்சு உங்க இஷ்டத்துக்கு யூகம் பண்ணின செய்திகற்பனை கேள்விகளை எல்லாம் இணைச்சு விவாத மேடை நடத்திடாதீங்க...

முதல்ல என்ன நடந்துச்சுன்னு விசாரணை செஞ்சுகிட்டு இருக்கோம்... அதுக்கு இடையூறா உங்க செய்தி இருக்கக்கூடாது...

தெளிவான விபரங்கள் கிடைச்சதும் நானே பிரஸ் மீட் வைக்கிறேன்... இப்போ ப்ளீஸ்...’’ என்று அந்த ஆய்வாளர்மருத்துவமனைக்குள் சென்று விட்டார்.

அத்துடன் அந்த சேனலில் வேறு செய்திகள் வர ஆரம்பித்தன.

அடுத்து ராமலிங்கம் எந்த சேனலையும் பார்க்கவில்லைஅணைத்து விட்டார்.

இப்போது அவர் அருகில் வந்த குருநாதன், ‘‘மாமா... சொக்கநாதன் சாருக்கு என்னாச்சு... அதான் நீங்க பயந்து போய் இருக்கீங்களா...’’என்றான்.

அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் விரக்தியாக சிரித்தார்.

அப்போது ராமலிங்கத்தின் செல்போன் ஒலித்தது. மனைவியின் நம்பர்.

எடுத்து, ‘‘ஹலோ...’’ என்றார்.

‘‘என்னங்க இப்படி ஆயிடுச்சு... அவர் தினமும் காலையில நம்ம கடைக்கு வர்றது எல்லாருக்குமே தெரியும்... அதனால போலீஸ் உங்களைப் புடிச்சு இழுத்துட்டுப் போயிடப் போறாங்க...’’என்ற அவள் குரலிலேயே பயம் தெரிந்தது.

‘‘இழுத்துகிட்டு போற மாதிரி இருந்தா காலையிலயே கொண்டு போயிருப்பாங்க... ஆனா, சார் சம்மந்தப்பட்ட ஆட்கள் எல்லாரையும் விசாரிக்கிற மாதிரி என்னையும் பத்து மணிக்கு ஸ்டேஷனுக்கு வர சொல்லியிருக்காங்க...’’ என்றார்.

மறுமுனையில் அவள் பதில் எதுவும் சொல்லாமல் அழுவது தெரிந்தது.

‘‘ந்த... நானே சாருக்கு இப்படி ஆனது தெரிஞ்சு ஆடிப்போய் இருக்கேன்... போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்படி போயிட்டு வரப்போறேன்னு மிரண்டு போய் கிடக்குறவனை நீ வேற பயமுறுத்துறியா... வை போனை...’’ என்று சொல்லிவிட்டு இவர் வைத்துவிட்டார்.

ஒன்பதரை மணிக்கு மேல் இருப்புக்கொள்ளவில்லை. பால்சட்டி, டீத்தூள் குவளை, வெந்நீர் என்று அனைத்தையும் இறக்கி வைத்துவிட்டு, ‘‘குருநாதா... பார்த்துக்க... நான் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்துடுறேன்...’’ என்று கிளம்பிவிட்டார்.

பழைய திரைப்படங்களில் சென்னைக்கு முதன் முதலில் வரும் கதாநாயகன், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனையோ, எல்ஐசி கட்டிடத்தையோ பிரமிப்பாக பார்ப்பானே... அந்த மாதிரி காவல்நிலைய கட்டிடத்தை வெளியில் நின்று ராமலிங்கம் பார்த்தார். ஆனால் அது பிரமிப்பாக தெரியவில்லை. அவரது மனம் முழுவதும் பயம்தான் எஞ்சியிருந்தது.

முன்பு அதே தெருவிலேயே அருகிலேயே திண்ணை, தாழ்வாரம், முற்றம் என்ற பாணியில் கட்டப்பட்டிருந்த தனியாருக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டில்தான் இந்த காவல் நிலையம் இயங்கி வந்ததாக சொல்லுவார்கள். அப்போது ஒரு நாள் கூட ராமலிங்கம் அந்த வீட்டுக்குள் (?!) சென்றதில்லை.

அந்த ஓட்டு வீடு மிக மோசமாக சிதிலமடைந்து ஒவ்வொரு பக்கமாக இடியத் தொடங்கியதாம்.

காவல்நிலைய கட்டிடத்தின் அவல நிலை பற்றி பலமுறை தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியான பிறகு இந்த இடத்தை ஒதுக்கி புதிய கட்டிடம் கட்ட உத்தரவு பிறப்பித்தது.

கட்டிட வேலை முடிந்து ஒண்ணரை ஆண்டுகள் கழித்து, ஆறு மாதத்திற்கு முன்புதான் இந்த புதிய கட்டிடத்திற்கு காவல்நிலையம் இடம் பெயர்ந்தது. இந்த தகவல்கள் எல்லாம் நாளிதழ்களில் உள்ளூர் செய்திகளில் வரிசையாக பிரசுரம் ஆனதால் ராமலிங்கத்திற்கு தெரிய வந்த தகவல்கள். அவர் இதை எல்லாம் மனதில் அசை போட்டுக் கொண்டு அப்படியே நின்று கொண்டிருந்தார்.

எங்கோ வெளியில் சென்று விட்டு வந்து கொண்டிருந்த காவலர் ஒருவர், ‘‘இங்க என்ன பார்க்குறீங்க?... புகார் கொடுக்கணும்னா உள்ள போங்க... இல்லன்னா இடத்தை காலி பண்ணுங்க...’’ என்று சொல்லிவிட்டு அவர் காவல்நிலையத்திற்குள் சென்றுவிட்டார்.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9


No comments:

Post a Comment