Friday, May 15, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

அத்தியாயம் - 6 - நாங்கள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறோம்...


  • பூமியில் வாழும் உயிர்களின் வாழ்வாதாரமாக தண்ணீரும், ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்தனவாக நீரின் வாயு மற்றும் திட வடிவங்களும் திகழ்கின்றன. பூமி சூரிய மண்டலத்தின் வசிக்கத்தக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. ஒருவேளை பூமியானது சூரியனுக்கு சிறிது அருகாமையிலோ (5 % அல்லது 8 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில்), அல்லது தொலைவிலோ இருக்கும் பட்சத்தில் நீரின் மூன்று வடிவங்களும் தற்போதிருப்பது போல் ஒருசேர காணப்படுவதற்கான வாய்ப்புகள் கடினம்.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

இப்படித்தான். ஒருவர் காவல் நிலையத்திற்கு சென்றாலே, ஒன்று குற்றவாளியாக இருக்க வேண்டும்... அல்லது பாதிக்கப்பட்டு புகார் கொடுக்கச் செல்பவராக இருக்க வேண்டும் என்ற மனநிலை தெரிந்தோ தெரியாமலோ மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விடுகிறது.

காவல் நிலையத்தின் போர்ட்டிகோ பகுதியின் மூலையில் ஒரு மரத்திலான டேபிளும் நாற்காலியும் போடப்பட்டு அங்கே ஒரு காவலர் அமர்ந்திருந்தார். டேபிளின் இந்தப்பக்கம் நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகள்.

இவராவது கனிவா பேசுறாறான்னு பார்ப்போம் என்ற எண்ணத்துடன், ராமலிங்கம் அவருடைய அருகில் சென்றார்.

அந்த காவலர் இவரை பேசவிடவில்லை.

‘‘ஆய்வாளர் உள்ளதான் இருக்காங்க... போய் பேசிட்டு வாங்க...’’

‘‘சார்... நான் யாருன்னு...’’ என்று ராமலிங்கம் தயங்கி நிற்ன்றார்.

‘‘அய்யா... உங்களைப் பத்தி தெரியும்... பெட்டிக்கடைன்னா வாட்டர் பாக்கெட், சைடு டிஷ், கப் விக்கிறதுக்கு... டீக்கடைன்னா தம் அடிக்கிறதுக்குன்னு ஒரு வரலாறை சிலர் உருவாக்கி வச்சிருக்காங்க...

ஆனா நீங்க இந்த ரெண்டு கடையை நடத்தியும் புகை, போதை, பாக்கு, கப், வாட்டர் பாக்கெட் மாதிரி வியாபாரம் செய்யாம இருக்குற விசயம் எனக்கு மட்டுமில்லை... ஆய்வாளருக்கும் தெரியும்.

இப்போ உங்களை வர சொல்லியிருக்குறது இயல்பான விசாரணைக்குதான்... பதற்றப்படாம போங்க... உங்களுக்கு தெரிஞ்ச விசயங்களை மறைக்காம அய்யா கிட்ட சொல்லுங்க...’’

அந்த காவலரின் பின்னால் சிறிய அளவில் ஒரு பேனர் இழுத்து கட்டப்பட்டிருந்தது. வெள்ளை நிற பின்னணியில் ‘‘நாங்கள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறோம்...’’ என்று நீல நில எழுத்துக்கள்.

சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கிறதே...’ என்ற தன்னம்பிக்கையுடன் ராமலிங்கம், காவல் நிலைய அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த அறை வாசலுக்கு அருகில் இருந்த மேசையில் நீள் முக்கோண வடிவிலான மரத்துண்டில்தலைமை காவலர்என்று எழுதப்பட்டிருந்தது.

ராமலிங்கம் அவர் அருகில் சென்று, ‘‘சார்...’’

அவர் கம்ப்யூட்டர் கீ போர்டில் இருந்து கைகளை எடுக்காமல், தலையை மட்டும் நிமிர்த்தி பார்த்தார். எதுவும் கேட்கவில்லை. அந்த பார்வைக்கு அர்த்தம், ‘‘என்ன?...’’ என்பதாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்ட ராமலிங்கம், ‘‘இன்ஸ்பெக்டர் ஐயா வர சொன்னாங்களாம்...’’ என்றார்.

‘‘எதுக்கு?...’’

‘‘சொக்கநாதன் சார்...’’ என்ற ராமலிங்கம் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் நிறுத்திக் கொண்டார்.

‘‘... அவரை தினமும் பார்க்குற டீக்கடை பார்ட்டியா நீங்க?...’’

‘‘ஆமாம் சார்...’’

‘‘ஐயா நீங்க வந்தா உள்ள அனுப்ப சொல்லியிருக்காரு... கதவைத் திறந்து உள்ள வரலாமான்னு கேட்டுட்டு போங்க...’’ என்ற அந்த தலைமைக்காவலர் மீண்டும் கம்ப்யூட்டரில் வேலையைத் தொடர்ந்தார்.

ஒருவர் புகார் கொடுக்கவோ, சாட்சி சொல்வது தொடர்பாகவோ காவல் நிலையம் சென்றால், நாள் முழுவதும் வராண்டாவில் பெஞ்சிலோ, கீழேயோ அமர வைத்து, மரியாதைக்குறைவாக நடத்துவார்கள் என்ற எண்ணத்துடன்தான் ராமலிங்கம் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அதற்கு முக்கிய காரணம் சில திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும்தான்.

காலையில் இரண்டு காவலர்கள் கடைக்கு வந்து அதிகார தோரணையில் மிரட்டி அழைத்தபோதுகூட கசப்பான அனுபவம்தான் கிடைக்கப்போகிறது என்று மனதை தேற்றிக் கொண்டார்.

காவல் நிலைய வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு கூட, ராமலிங்கம் மனதில் அவநம்பிக்கையை விதைக்கும் விதமாகத்தான் ஒரு காவலர் பேசினார். ஆனால் வரவேற்பாளராக அமர்ந்திருந்த காவலரும், தலைமைக்காவலரும் பேசிய விதம், ராமலிங்கத்தின் பயத்தை சற்று குறைத்தது.


ஆய்வாளரின் அறைக் கதவு முழுவதுமாக இல்லை. இரண்டடி உயரமுள்ள ஸ்பிரிங் இணைக்கப்பட்ட கதவு மூன்றரை அடி உயரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. அதாவது, அமர்ந்திருக்கும்  ஆய்வாளர், டேபிள், அவர் முகம் ஆகியவற்றை மட்டும் மறைக்கும் விதமாக பழைய திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல்தான் இருந்தது.

ஸ்பிரிங் மிக அழுத்தமாகவே இருந்ததால் தன் பலத்தை சற்று அதிகமாகவே பயன்படுத்த வேண்டியிருந்தது. ஒரு கதவை மட்டும் லேசாக திறந்து தன்னுடைய முகத்தை காட்டினார். லேண்ட்லைன் போனில் பேசிக்கொண்டிருந்த ஆய்வாளர், தலையை மேலிருந்து கீழாக அசைத்து, உள்ளே வர அனுமதி அளித்தார்.

உள்ளே சென்றதும் ஆய்வாளர் போனில் பேசியபடியே நாற்காலியை காட்டினார். இந்த அளவுக்கு மரியாதை கிடைப்பது ராமலிங்கத்திற்கு வியப்பாகத்தான் இருந்தது.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment