Saturday, May 16, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

அத்தியாயம் - 7 - ஒரு லட்சம் சம்பளம் வாங்குறவர் உங்க கடைக்கு எப்படி...?


  • நீரியல்(ஹைட்ராலஜி) என்பது பூமி முழுவதிலும் உள்ள நீரின் போக்கு, பரவல், மற்றும் தரத்தைப் பற்றிய கல்வியாகும். ஹைட்ரோகிராஃபி என்பது நீரின் விநியோகத்தைக் குறித்த கல்வியாகும். நிலத்தடி நீரின் பரவலையும், போக்கையும் குறித்த கல்வி ஹைட்ரோஜியாலஜி எனவும் உறைபனி ஆறுகளைக் குறித்த கல்வி கிளேஸியாலஜி எனவும் உள்நாட்டு நீர் நிலைகளைக் குறித்த கல்வி லிம்னாலஜி எனவும் சமுத்திரங்களின் பரவலைக் குறித்த கல்வி ஒஷியனோகிராஃபி எனவும் அழைக்கப்படுகிறது. நீரியலின் அங்கமான சூழ்நிலை நிகழ்வுகள் ஈகோ ஹைட்ராலஜியின் கீழ் வருகிறது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

ஆய்வாளர் தனபாலன், ‘‘ஓக்கே சார்... அடுத்து ஒருத்தர் கிட்ட விசாரணை செய்யப்போறேன்... பேசிட்டு ஏதும் முக்கியமான தகவல் கிடைச்சா அப்டேட் செய்யுறேன் சார்... தாங்க்யூ சார்...’’ என்று ரிசீவரை அதன் இடத்தில் வைத்து விட்டு ராமலிங்கத்தை நேருக்கு நேர் பார்த்தார்.

காவல் நிலையத்திற்குள் நுழைந்ததில் இருந்து இதுவரை கிடைத்த மரியாதை என்னதான் நம்பிக்கை கொடுத்திருந்தாலும், இப்போது ஆய்வாளர் இவர் கண்களை நேருக்கு நேர் பார்த்தபோது ராமலிங்கத்தின் இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்தது. மனதுக்குள் பதற்றமாகத்தான் உணர்ந்தார்.

அதை தனபாலன் புரிந்து கொண்டு, ‘‘மிஸ்டர் ராமலிங்கம்... நீங்க யாரு... உங்க முகவரி என்ன, மனைவி, குழந்தைகள் விபரமெல்லாம் எங்க டிப்பார்ட்மெண்ட்டுக்கு எப்பவோ வந்துடுச்சு... அது தொடர்பா எனக்கு ஏதும் சந்தேகம் வந்தா கேட்டுக்குறேன்...

இப்போ நான் கேட்குற கேள்விகளுக்கு உங்க கிட்ட இருந்து உண்மையான பதில் வேணும்...’’ என்றார்.

‘‘பொய் சொல்ற தைரியம் எல்லாம் எனக்கு கிடையாதுங்க...’’

‘‘நானும் நம்பறேன்... பொதுவா நம்ம ஊரைப் பொறுத்தவரை மாசம் முப்பதாயிரம் சம்பாதிக்கிறவங்க கூட ஸ்டேட்டஸ் மெயின்டெய்ன் பண்ணுவாங்க. 

சொக்கநாதன் சார் அரசுக் கல்லூரியில பேராசிரியர். ஒரு லட்சத்தை தாண்டி மாச சம்பளம் வாங்குறவர்.  அதே நேரம் புதுப்புது கண்டுபிடிப்புகளை முயற்சிக்கிற விஞ்ஞானின்னும் சொல்லலாம்.

அவர் உங்க கடைக்கு வந்து பேப்பர் கட்டு பிரிச்சு போஸ்டர் போடுற அளவுக்கு நெருக்கமா இருந்துருக்கார். அப்போ அவரோட நண்பர்கள், எதிரிகள் பத்தி கூட உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கணுமே...?’’ என்று தனபாலன் இடைவெளி விட்டார்.

‘‘இந்த சந்தேகத்தை அவர் என் கூட பழக ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே கேட்டேன் சார்.

சொக்கநாதன் சார் படிக்கிறப்ப கூட பல கூலி வேலைகள் செஞ்சு கஷ்டப்பட்டு படிச்சதாவும், அந்த காலகட்டத்தை நினைச்சு பார்க்குறப்ப, நீங்க ஒரு கடை முதலாளி. உங்க தகுதியை ஏன் குறைச்சு பேசுறீங்க... தாழ்வு மனப்பான்மையை தூக்கிப் போடுங்கன்னு சொல்லுவார் சார்.

அவர் எங்கிருந்து வந்தோம்னு பழசை மறக்காம இருக்குறவர். அதனாலதான் நிறைய அரசுப்பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குறதுக்கும் வழிகாட்டுறார். அதுக்கு நிறைய பண உதவி செய்யுறார்.

யூ டியூப் சேனல்ல நம்ம வீட்டுலயே சிம்பிளா செஞ்சு நல்ல முறையில உபயோகப்படுத்துற மாதிரி நிறைய கண்டுபிடிப்புகள் எப்படி உருவாக்குறதுன்னு வீடியோ போட்டுருக்கார்...’’ என்று ராமலிங்கம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆய்வாளர் தனபாலன் இடையில் புகுந்தார்.

‘‘அந்த வீடியோக்களை நானும் பார்த்திருக்கேன்... என் மனைவியும் மகளுமே, அதுல சில விஷயங்களை பார்த்து சில பொருட்கள் செய்திருக்காங்க... 

உலகத்துக்கே தெரிஞ்ச செய்திகளை எனக்கு திரும்ப சொல்லாதீங்க...

தினமும் டீ குடிக்க வர்ற ஒருத்தர் இவ்வளவு நெருக்கமா இருக்க ஏதாவது அழுத்தமான காரணங்கள் இருக்கணுமே... ஏன்னா, ஏழையும் பணக்காரனும் நெருங்கிய சிநேகிதர்களா தொடர்ந்து இருக்குறது சினிமாக்கள்லதான் சாத்தியம்...’’ என்று தனபாலன் பேச்சைத் தொடங்கிய இடத்திற்கே திரும்ப வந்தார்.

‘‘சினிமாவுல மட்டுமில்லை சார்... நிஜ வாழ்க்கையிலயும் எங்களை விட நெருக்கமான நண்பர்கள் ஆயிரக்கணக்குல... ஏன் லட்சத்துல கூட இருக்கலாம். அவங்க எல்லாம் எல்லாருக்கும் தெரியுற மாதிரி ரஜினி மம்முட்டியோட காட்டுக்குயிலுன்னு ஆடிப்பாடுறது கிடையாது... 


இது மாதிரி நட்பு நீடிக்க முக்கிய காரணம் ஒண்ணு இருக்கு. இதுல ரெண்டு பேரும் ஒருத்தர் கிட்ட இன்னொருத்தர் எதையுமே எதிர்பார்க்க மாட்டாங்க... குடும்பம், சக ஊழியர்கள் அப்படின்னு யார்கிட்டயும் மனம் விட்டு பேச முடியாத சில விசயங்களை பேசி மன ஆறுதல் அடையுறது மட்டும்தான் நோக்கமாக இருக்கும்.

அதே நேரத்துல ஒருத்தரோட தேவையை புரிஞ்சுகிட்டு முடிஞ்ச உதவியை வலுக்கட்டாயமா செய்யுற இயல்பு இருக்கும்...

எனக்கும் சொக்கநாதன் சாருக்கும் அப்படிப்பட்ட ஒரு நட்புதான்...’’ என்று ராமலிங்கத்திடம் இருந்து தெளிவான பதில் வந்தது.

‘‘பண விஷயத்துல நீங்க சொக்கநாதனுக்கு உதவி செய்ய வாய்ப்புக்கள் ரொம்ப குறைவு. அவர் உங்களுக்கு பெரிய அளவுல பணம் எதுவும் கொடுத்து உதவியிருக்காரா?...’’

‘‘அவர் எனக்கு பணமெல்லாம் கொடுத்து உதவியது கிடையாது. 

நாம தப்பு செய்யுறோம்னு தெரிஞ்சாலும் குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலை காரணமா அதை நிறுத்த முடியாம தொடருவோம்...

தப்பு பண்ணாதன்னு நமக்கு அறிவுரை சொல்றவங்க கூட, மாற்று வழியைக் கேட்டா, நீதான் அதை தேடணும்னு சொல்லிட்டு கழண்டுக்குவாங்க.

ஆனா, சொக்கநாதன் சார் அப்படி ஒதுங்கிப் போகலை.

என்னோட கடையில சிகரெட், பாக்கு உள்ளிட்ட பொருட்களோட விற்பனையை நிறுத்தினதும் அதை விட கூடுதல் லாபம் சம்பாதிக்க வழிகாட்டுனாரு... 

புகைப்பிடிக்க அனுமதி இல்லைன்னு சொன்னதுமே அந்த பழக்கம் இருக்குற வாடிக்கையாளர்கள் ஒரு சிலர் என் கடைக்கு வர்றது இல்லைன்னாலும், குழந்தைகள், பெண்கள் அச்சமில்லாம வர ஆரம்பிச்சாங்க. 

என் கடை வாசலைத் தாண்டி தைரியமா நடந்து போனாங்க. எனக்கு நல்ல மரியாதை கிடைச்சது. இது மாதிரியான நல்ல பேர் கோடி ரூபாய் வருமானத்துக்கு சமம்.

அது தவிர மாலை நேரங்கள்ல துளசி, முடக்கத்தான், தூதுவளை அப்படின்னு பல மூலிகை சூப் வியாபாரம் செய்ய யோசனை கொடுத்ததே அவர்தான்.’’ என்று ராமலிங்கம் சொன்னதைக் கேட்ட தனபாலன் புன்னகைத்தார்.

‘‘ரெண்டு மூணு தடவை எனக்கு இருமல், சளி இருந்தப்ப உங்க கடை தூதுவளை சூப் பார்சல் வாங்கிட்டு வர சொல்லி குடிச்சிருக்கேன்... நல்ல பலன் கிடைச்சது. இதுக்கெல்லாம் அஸ்திவாரம் போட்ட அந்த நல்ல மனுஷனை யார் இப்படி செஞ்சிருப்பான்னு தெரியலை. உங்களுக்கு யார்மேலயாவது சந்தேகம் இருக்கா?...’’ 

‘‘யாரைக் கண்டுபிடிச்சு இனி என்ன செய்யுறது?... போன மனுசன் திரும்பியா வரப்போறாரு...!’’ என்று ராமலிங்கம் பெருமூச்சு விட்டார்.

அப்போது என்று தனபாலன் கேட்ட கேள்வியில் ராமலிங்கம் முகத்தில் அதிர்ச்சி.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9


No comments:

Post a Comment