Sunday, May 17, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

அத்தியாயம் - 8 - காவல்துறையினரின் மவுனம் கலைந்தது...

  • நிலத்தடி நீரும், நன்னீரும், மனிதர்களுக்கு உபயோகமுள்ள அல்லது உபயோக சாத்தியமுள்ள நீராதாரங்களாகும். தண்ணீரானது சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், நதிகள், நீரோட்டங்கள், கால்வாய்கள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் காணப்படுகிறது. 
  • நன்னீர் சேமிப்பு: நீரானது நிலத்தினுள் ஊடுருவி நிலத்தடி நீர்கொள் படுகைகளுக்குள் செல்லக் கூடியது. இந்நிலத்தடி நீர் பின்னர் நீரூற்றுக்கள், வெந்நீரூற்றுக்கள் மற்றும் உஷ்ண ஊற்றுக்கள் வாயிலாக மீண்டும் கிளர்ந்தெழுந்து, மேற்பரப்பிற்கு வரலாம். நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் செயற்கையாகவும் இறைத்துக் கொள்ளலாம். மனிதர்களுக்கும், நிலத்தில் வாழும் ஏனைய உயிர்களுக்கும் நன்னீர் இன்றியமையாததாதலால், இவ்விதமான நீர் சேகரிப்பு மிக முக்கியமான ஒன்று. ஆனால், உலகத்தின் பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையே நிலவுகிறது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

சொக்கநாதன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று காவல்துறையோ, மருத்துவமனை நிர்வாகமோ உடனடியாக தகவல் வெளியிடவில்லை.

ஆனால் நடந்த சம்பவம் குறித்த செய்தி வெளியில் பரவியவுடன் மருத்துவமனை வாசலில் கூடிய ஊடகங்கள், தங்களது ஊகங்களை பிரேக்கிங் நியூஸ் என்று நொடிக்கு நொடி பிளாஷ் நியூஸ் போட்டார்கள். 

இதனால் மக்களின் இதயம் வெடிக்குமா வெடிக்காதா என்று இன்னொரு பக்கம் விவாத நிகழ்ச்சி நடத்தக்கூட வாய்ப்பு இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பரவத் தொடங்கின.

ராமலிங்கம் தனபாலன் அறைக்குள் வருவதற்கு சற்று நேரம் முன்பு வரை சொக்கநாதன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற தகவலை சொல்லாமல்தான் இருந்தார்கள். ஆனால் அதிக நேரம் அமைதி காக்க முடியவில்லை. 

ராமலிங்கம் உள்ளே நுழையும்போது, அது குறித்துதான் மேலிடத்தில் பேசியிருக்க வேண்டும்.

தனபாலனிடம், ‘‘போன மனுசன் இனி திரும்பியா வரப்போறாரு...!’’ என்று ராமலிங்கம் கேட்டபோதுதான் அவர் உண்மையை உடைத்தார்.

‘‘மிஸ்டர் ராமலிங்கம்...! சில நேரங்கள்ல இது மாதிரி குற்றங்கள் நடந்ததும் பாதிக்கப்பட்ட நபர் இறந்துட்டதா செய்தியை பரப்புவோம்... அப்போ குற்றவாளி ஏதாவது சொதப்பி எங்க கிட்ட சீக்கிரமே சிக்கிடுறது உண்டு.

ஆனா சொக்கநாதன் சார் மேட்டர்ல எங்களால அப்படி சொல்ல முடியலை... ஏன்னா, அவர் இறந்துட்டாருன்னு சொன்னா உடனே பெரிய மக்கள் வெள்ளமே திரண்டு அவர் வீட்டுக்கு போய் அஞ்சலி செலுத்த காத்திருக்கும்...

இது மட்டுமில்லாம அவர் புரொபசர் மட்டுமில்லை... இளம் விஞ்ஞானிகளை உருவாக்குற மேதைன்னுங்குறதால இந்த நாலு மணி நேரத்துக்குள்ளயே இணையதளம் பூராவும் அவரோட பேர்தான் வைரலாகியிருக்கு. 

இதுக்குமேலயும் நாங்க அமைதியா இருந்தா, ஆளுக்கு ஒரு திரைக்கதை எழுதி பெரிய குழப்பம் உருவாகுற சூழ்நிலை. அதனால, பிரஸ்கிட்ட உண்மையை சொல்லிட்டோம்...’’ என்ற தனபாலன், ரிமோட்டை எடுத்து அந்த அறையில் இருந்த தொலைக்காட்சியை இயக்கினார்.

‘‘சொக்கநாதன் உயிருடன்தான் இருக்கிறார்... மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் மவுனம் கலைந்தது...’’ என்ற பிளாஷ் நியூஸ் திரையில் காட்டப்பட்டது.

அடுத்து மருத்துவமனை வாசலில் தலைமை மருத்துவர், காவல் உதவி ஆய்வாளர் திலீப்குமார் ஆகியோர்களுக்கு முன்னால் மைக்குகள் நீட்டப்பட்டிருந்தன.

‘‘இன்னைக்கு காலையில சொக்கநாதன் வழக்கம்போல வாக்கிங் போறதா சொல்லிட்டு வெளியே வந்திருக்கார். இரண்டாவது மெயின்ரோட்டுல வரும்போது, அங்கே மரத்துல சிக்கியிருந்த காத்தாடியின் நூல் பறந்து வந்து சிக்கி இவரோட கழுத்துல காயத்தை ஏற்படுத்தியிருக்கு. 


இது விபத்தா அல்லது திட்டமிட்ட சதியான்னு உரிய விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும்... அது வரை பரபரப்புக்காக ஊகங்கள் எதையும் ஊடகங்கள் ஒளிபரப்ப வேண்டாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்குறேன்...’’ என்று உதவி ஆய்வாளர் திலீப்குமார் பேசி முடித்து விட்டு பக்கத்தில் இருந்த மருத்துவரைப் பார்த்தார்.

இப்போது அந்த மருத்துவர், ‘‘கழுத்துல முக்கியமான நரம்பு அறுந்து போனதால அவர் மயக்கம் தெளியுமா?... இல்ல கோமா நிலையிலயே இருப்பாரான்னு உடனடியா எதுவும் சொல்ல முடியாது... மதுரை மெடிக்கல் காலேஜ்ல இருந்து ஸ்பெஷலிஸ்ட் வந்துகிட்டு இருக்காங்க... நாங்க எங்களோட கடமையை சரியா செஞ்சுகிட்டு இருக்கோம்...’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டு நகர்ந்து விட்டார்.

‘‘இன்னொரு கேள்வி....’’ என்று நிருபர்கள் ஆரம்பிக்கவும், ‘‘ப்ளீஸ்... அடுத்து மேலிடத்துல இருந்து தகவல் வந்ததும் நானே உங்களை கூப்பிட்டு பேசுறேன்...’’ என்ற திலீப்குமார் திரும்பிப் பார்க்காமல் மருத்துவருடன் மருத்துவமனைக்குள் சென்று விட்டார்.

இப்போது அந்த தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர், கேமரா முன்னால் மைக்குடன் நின்று, ‘‘உண்மையில் மக்கள் விஞ்ஞானி சொக்கநாதனுக்கு என்னவாயிற்று... காவல்துறையும், மருத்துவத்துறையும் எதையாவது மறைக்கிறதா?... உண்மையை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்...’’ என்று சொன்னார். மறுபடியும் முதலில் ஓடிய ப்ளாஷ் நியூஸ் ஓடத் தொடங்கியது.

தனபாலன் இப்போது தொலைக்காட்சியை அணைத்து விட்டு ராமலிங்கத்தைப் பார்த்தார்.

‘‘சார்... வசந்தம் நகருக்கு வடக்கே, ஆற்றங்கரை ஓரமா பெரிய திடல்ல ஒவ்வொரு வருசமும் தீபாவளிக்கு அடுத்து வர்ற ஞாயிற்றுக்கிழமை காத்தாடி போட்டி நடக்குறது எல்லாருக்கும் தெரிஞ்ச செய்திதான்.

அப்போ நிறைய பட்டங்கள் வாலறுந்து, நூல் அறுந்து வசந்தம் நகர் மட்டுமில்லாம பல இடங்கள்ல உள்ள மரம், மின்கம்பங்கள்ல சிக்குறதும் புதிய செய்தி இல்லையே...

என்ன... இதுநாள் வரை அப்படி அறுந்து தொங்கின பட்டங்களால யாருக்கும் காயம் ஏற்பட்டதா தெரியலை... சொக்கநாதன் சாருக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்குறேன்...’’ என்றார்.

‘‘இதுநாள் வரை இப்படி நடந்தது இல்லைன்னு நீங்களே சொல்லிட்டீங்க... எங்க சந்தேகமும் அதுதான். சாதாரண நூலா இருந்து கழுத்துல சிக்கினா கூட அதை கையாலயே அறுத்து எறிஞ்சிடலாம்... அவருக்கும் காயமே ஏற்பட்டிருக்காது... அப்படி ஏற்பட்டிருந்தாலும் லேசான கீறல்தான் விழுந்திருக்கும்.

ஆனா அவர் கழுத்தை அறுத்தது மாஞ்சா நூல்.’’ என்றதுமே ராமலிங்கத்தின் வாயிலிருந்து, ‘‘அடப்பாவிகளா.... இதுவரைக்கும் சென்னையிலதான் மாஞ்சா நூல் அடிக்கடி குழந்தைங்க, பெரியவங்கன்னு பலி வாங்கிட்டு இருந்துச்சு... அதை நம்ம ஊர் வரைக்கும் கொண்டு வந்துட்டானுங்களா...’’ என்ற வார்த்தைகள் வெளிவந்தன.

‘‘மிஸ்டர் ராமலிங்கம்... பட்டம் பறந்துகிட்டு இருக்கும்போது அறுந்து வந்து சொக்கநாதன் கழுத்தை சுத்தியிருந்தா ஒரு லாஜிக் இருக்கு. அதிகாலை நேரத்துல பெரிய காத்து எதுவும் அடிக்காத நேரத்துல மரத்துல சிக்கியிருந்த நூல் இவர் கழுத்துக்கு வந்தது எப்படி... இது மாதிரி காவல்துறைக்கு ஆயிரம் கேள்விகள் இருக்கு...

அதை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்... இப்போ நீங்க கிளம்புங்க... எங்ககிட்ட சொல்லாம வெளியூர் எங்கயும் போகக்கூடாது... எப்போ விசாரணைக்கு கூப்பிட்டாலும் வரணும்...’’ என்று சொல்லி அனுப்பி விட்டார் தனபாலன்.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment