Monday, May 18, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

அத்தியாயம் - 9 - சொக்கநாதன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!


  • நீர்வாழ் விலங்குகள் உயிர்வாழத் தேவையான பிராணவாயுவை பல வழிகளில் பெற்றுக் கொள்கின்றன. மீன்களுக்கு நுரையீரலுக்குப் பதிலாகச் செவுள்கள் இருக்கின்றன. நுரையீரல் மீன்(லங்ஃபிஷ்), நுரையீரலையும் செவுளையும் கொண்டது. கடல் பாலூட்டிகளான, டால்ஃபின்கள், திமிங்கலங்கள், நீர் நாய்கள், கடல் சிங்கங்கள் போன்றவை அவ்வப்போது வெளிக்காற்றை சுவாசிக்க நீருக்கு வெளியே தலைகாட்டவேண்டும். சிற்றுயிர்கள் பிராணவாயுவைத் தங்கள் தோலின் வழியாக உட்கவரக் கூடியவை.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

சொக்கநாதன் வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது என்ற செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பித்தபோது தனபாலனும் உதவி ஆய்வாளர் திலீப்குமாரும் ஒரு இடத்தில் விசாரணையில் ஈடுபட்டிருந்தார்கள். 

தொலைக்காட்சியை பார்த்து விட்டு, தலைமைக்காவலர் சேதுராமன்தான் செல்போனில் அழைத்து தகவல் சொன்னார்.

அவர் பேசி முடித்த நொடி எஸ்.பி அலுவலகத்தில் இருந்து வயர்லெஸ்சில் கூப்பிட்டு, இது வரைக்கும் விசாரிச்சதுக்கான ரெக்கார்டுகளை தயார் செஞ்சு வையுங்க... சிபிசிஐடியில யாருக்கு பொறுப்பு கொடுக்குறாங்களோ அவங்க வந்து வாங்கிக்குவாங்க... என்று உத்தரவு போட்டு விட்டார்கள்.

அன்று இரவு வெகுநேரம் எல்லா தொலைக்காட்சிகளிலும் தோன்றி மறைந்த பிளாஷ் நியூஸ் இதுதான்.

மறுநாள் எல்லா நாளிதழ்களிலும் தலைப்புச்செய்தியாகவும் வெளிவந்தது.

டீக்கடையுடன் இணைந்த பெட்டிக்கடை ஸ்டாலில் அன்றைய நாளிதழ்களின் போஸ்டர்களை வரிசையாக கோர்த்து பின் அடித்தார் ராமலிங்கம்.

பின்பு நான்கடி தூரம் தள்ளி நின்று அவற்றில் இருந்த செய்திகளை பார்த்தார்.

‘‘சொக்கநாதன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!’’

‘‘சிபிசிஐடிக்கு சொக்கநாதன் வழக்கை மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி’’

‘‘சொக்கநாதன் வழக்கு : நீதியை நிலைநாட்டுவதற்காகவே இந்த நடவடிக்கை! ஆளும் கட்சி அமைச்சர்.’’

‘‘தேர்தலை எதிர்பார்த்து சொக்கநாதன் வழக்கில் கண்துடைப்பு நடவடிக்கை!  எதிர்க்கட்சி தலைவர்’’

இவ்வாறு, நான்கு முன்னணி நாளிதழ்களின் போஸ்டர்களிலும் ஒவ்வொரு விதமாக ஆனால் ஒரே செய்திதான் முதலாவதாக இடம் பெற்றிருந்தது.

பெருமூச்சுடன் பக்கவாட்டில் திரும்பி வானத்தைப் பார்த்தார்.

தொலைவில் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் கோபுரத்தின் விமானமும் கலசமும் தெரிந்தது.

அதற்கு அப்பால் வானத்தின் அடிப்பகுதியில் மேகக்கூட்டம். அதற்கு பின்புறம் லேசாக சிவக்கத் தொடங்கியிருந்தது. மேகத்தின் முனைகளில் ஏதோ வெள்ளிக்கம்பியால் பார்டர் கட்டியது போல் பளபளப்பு.

‘‘ராமண்ணே... ஏன் கடையை விட்டுட்டு வெளியில வந்து நிக்கிறீங்க... வந்து டீயைப் போடுங்க...’’ என்ற குரல் கேட்டது.

வழக்கமாக இதே நேரத்திற்கு வரும் வாடிக்கையாளர்.

ராமலிங்கம் எதுவும் பேசாமல் வேறு ஏதோ சிந்தனையுடன் டீ மேசைக்கு சென்றார். ஒரு கண்ணாடி டம்ளரில் வெந்நீரை பிடித்து பக்கவாட்டில் இரண்டு முறை ஆற்றி கீழே ஊற்றினார். நாட்டு சர்க்கரையை பயன்படுத்தி டீ தயாரித்து டீ ஸ்டாலின் பக்கவாட்டு பலகையில் வைத்து, ‘‘எடுத்துக்கப்பா...’’ என்றார்.

அப்போதும் அந்த வாடிக்கையாளர், போஸ்டரில் இருந்து கண்களை அகற்றவில்லை...

ராமலிங்கம் மீண்டும், ‘‘டீ போட்டாச்சு...’’ என்றார்.

அந்த நபர் அருகில் வந்து டீயை எடுத்து ஊதி ஊதி குடித்துக் கொண்டே, ‘‘அண்ணே... சார் இந்நேரத்துக்கு இங்க டீ குடிச்சு, அரட்டையை முடிச்சுட்டு கிளம்பியிருப்பாருல்ல...’’ என்றார்.

‘‘வருசக்கணக்கா நம்ம கூட பேசிப் பழகினவரு இல்லையா... அதான் ஒரு வாரம் ஆனாலும் கடையை திறந்ததுமே அவர் நினைவாத்தான் இருக்கு...’’

‘‘அவரைப் பத்தின செய்தி பல தடவை உள் பக்கங்கள்ல வந்துருக்கு... ஆனா இப்படி ஒரு சம்பவம் நடந்து அவர் பேர் தலைப்புச் செய்தியா போஸ்டர்ல வரணும்னு விதி?...’’ என்று அந்த நபரும் வருத்தப்பட்டதுடன் கிளாசை வைத்துவிட்டு காசைக் கொடுத்ததும் கிளம்பிவிட்டார்.

தினமும் பார்த்து பழகிய ஒருத்தருக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா முதல்நாள் முழுவதும் அவரைப் பத்தியே பேசிகிட்டு இருப்பாங்க... 

அடுத்தடுத்த நாட்களில் அந்த நபர் தொடர்புடைய ஏதாவது நினைவு ஏற்படும்போது அல்லது யாராவது அந்த பேச்சை ஆரம்பித்தால் மட்டும் பேசுவார்கள். 

மேலும் சில நாட்கள் கடந்தால் அப்படி ஒரு நபர் இருந்ததையே சுத்தமாக மறந்து விடுவார்கள். இவ்வளவுதான் உலகம்... 

ராமலிங்கமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் ஒருவாரமாக காலையில் சொக்கநாதனின் நினைவு வருவதற்கு அழுத்தமான காரணம் இருந்தது. 


கடந்த பல ஆண்டுகளாகவே தினமும் காலையில் ராமலிங்கம் கடை திறக்கும்போதோ அல்லது அடுத்த ஐந்து நிமிடங்களிலோ சொக்கநாதன் வந்து விடுவார்.

ராமலிங்கம் கடை வாசல் கூட்டி, தண்ணீர் தெளித்து விட்டு டீ ஸ்டாலை தயார் செய்து கொண்டிருப்பார். அந்த நேரத்தில் சொக்கநாதன், நாளிதழ் கட்டுக்களை பிரித்து போஸ்டர்களை பெட்டிக்கடை ஸ்டாலில் தொங்க விடுவார். 

பிறகு ஆறு அடி தூரம் தள்ளி நின்று போஸ்டர்களின் தலைப்புச் செய்திகளை பார்ப்பார்.

தொடக்கத்தில், ராமலிங்கம், ‘‘சார்... உங்க ரேஞ்சுக்கு இதையெல்லாம் நீங்க செய்யாதீங்க...’’ என்று சொல்லிப் பார்த்தார்.

‘‘அதனால என்னப்பா... நான் என்ன கோடீஸ்வரன் வீட்டுலயா பிறந்து வளர்ந்தேன்...? ஒருவேளை சோத்துக்கே கஷ்டப்பட்ட குடும்பத்துல பிறந்து வளர்ந்து, இது மாதிரி ஏகப்பட்ட சிறு சிறு வேலைகள் செய்து, பலரோட உதவியாலயும், ஒத்துழைப்பாலயும் இன்னைக்கு இந்த நிலையில இருக்கேன்...’’ என்ற பதில் வரும்.

சொக்கநாதனின் பெருந்தன்மை அது. அவரிடம் நேரடியாக பழக்கமில்லாதவர்களுக்கு கூட அவரது கடின உழைப்பு தெரியும். 

ஆனால் அந்த நிலைக்கு பலருக்கும் பங்கு உண்டு என்று வெளிப்படையாக வெற்றியை பங்கு போட்டுக் கொள்வார்.

‘‘போஸ்டர்ல என்ன சார் தெரிஞ்சுக்க முடியும்... பேப்பரைன்னா எடுத்து பாருங்களேன்...’’என்று ராமலிங்கம் சொன்னால், ‘‘வியாபாரத்துக்காக இருக்குற பேப்பரை நான் ஓசியில எடுத்து படிச்சுட்டு வைக்கிறது தப்பு. என்னைப்பார்த்து இன்னும் நாலு பேர் இதே வேலையை செய்யுவாங்க. 

அது வியாபாரத்துக்கு நல்லது இல்லை. என் வீட்டுக்கு தமிழ், ஆங்கில தினசரிகள்னு ஆறு பேப்பர்களை வாங்குறேன். அதை படிச்சுக்குறேன்...’’ என்று அழகாக மறுப்பார்.

அப்படிப்பட்ட பண்புள்ள நபருக்கு எப்படி எதிரிகள் உருவானார்கள் என்பதுதான் ராமலிங்கத்துக்கு புரியாத புதிராக இருந்தது.

ஆனால் கடைக்கு வழக்கமாக வரும் சிலர், ‘‘அண்ணே... நேர்மையா வாழணும்... நல்லது செய்யணும்னு நினைக்கிறவங்களுக்குதாண்ணே எதிரிகள் எப்பவும் அதிகம். 

நூறு நல்லவன் சேர்ந்து ஒருத்தனுக்கு நல்லதை அவ்வளவு சீக்கிரம் செய்ய மாட்டான்... அவன் குடும்பம், அவன் வேலைன்னு ஓடிகிட்டே இருப்பான்.

ஆனா, ஒரே ஒரு கெட்டவன் செயல்பட்டாலே நேர்மையான ஆளுக்கு பாதிப்புதானே....

சொக்கநாதன் விஷயத்துல இதுதான் நடந்துருக்கு... டீக்கடை நடத்திகிட்டு இன்னும் உலகம் தெரியாத ஆளா இருக்கீங்கிளே...’’ என்று பொதுவான உண்மையை உடைத்து விட்டு சென்றார்கள்.

வழக்கை விசாரித்த தனபாலன், ராமலிங்கத்திடம் மென்மையாக நடந்து கொண்டாலும், ஏதோ ஒரு சந்தேகத்துடனேயே பேசியதாகத்தான் தெரிந்தது.

முதல் நாள் இரண்டு மணி நேரம் ராமலிங்கத்தை பேச விட்டார். அடுத்த நாள் அரை மணி நேரத்திலேயே ‘கிளம்புங்க’ என்று சொல்லிவிட்டார். ராமலிங்கம் வெளியேறும்போது, ‘‘எங்க கிட்ட சொல்லாம வெளியூருக்கு போகக்கூடாது... எப்ப விசாரணைக்கு கூப்பிட்டாலும் வரணும்...’’ என்று உள்ளிருந்தே குரல் கேட்டது.

ஆனால் அடுத்த ஐந்து நாட்களும் காவல்நிலையத்திலிருந்து ராமலிங்கத்தை அழைக்கவில்லை. சரி... இனிமேல் எந்த தொந்தரவும் இருக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் என்ற அறிவிப்பு.

காவல்துறையை நினைத்து மனதில் பயம் எழுந்தாலும், அவருக்கு சொக்கநாதன் மேல் எந்த வெறுப்பும் வரவில்லை.

போஸ்டரை பார்த்துக் கொண்டே வந்த ஒருவர், ‘‘என்னண்ணே... கேஸ் சிபிசிஐடி கைக்கு போகுதாமே...

ஏற்கனவே ரெண்டு நாள் போலீஸ் உங்களை கூப்பிட்டு விசாரிச்சாங்க... இப்ப இந்த போலீசும் கூப்பிடுவாங்களா?’’ என்றார்.

இந்த கேள்வியில் ராமலிங்கத்தின் இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்தது.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

No comments:

Post a Comment