Friday, May 1, 2020

தேவா


விஜய் நடித்த திரைப்படம் 1995
 தேவாவின் இசையில் இளைய தளபதி விஜய் நடிக்கும் தேவா என்று போஸ்டரில் விளம்பரம் செய்திருந்தார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு 17/02/1995ம் தேதி ஒரு வெள்ளிக்கிழமையில் வெளியானது இந்த படம். மறுநாள் சனிக்கிழமையே திருவாரூர் நடேஷ் திரையரங்கத்தில் சென்று பார்த்தேன்.

பொதுவாக கதாநாயகியின் தந்தை அல்லது சகோதரர் வில்லனாக இருப்பதாக வெளிவந்த படங்களுக்கு மத்தியில் கதாநாயகனின் அண்ணன் மன்சூர் அலிகான் வில்லன் என்ற கதையமைப்பில் வந்த படம்.
அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு கிராம மக்களுக்கு இடையூறு செய்யும் மன்சூர் அலிகான். அவரை எதிர்த்து சுதந்திரம் வேண்டும் என்று போராடும் பெரியவராக சிவக்குமார். அவரது மகள் சுவாதியை விஜய் காதலிப்பதுடன், ஊர் மக்களை அடிமைப்படுத்தி இருக்கும் மன்சூர் அலிகானை அவரது தம்பியே எதிர்ப்பதாக கதை செல்லும்.

கடைசியில் அவருடைய உயிரை எடுக்க உரிமை இல்லை என்று சிவக்குமார் அறிவுரை கூறும்போது, மன்சூர் அலிகானால் மகளை பறிகொடுத்த, மன்சூருடன் எல்லா தவறுகளுக்கும் துணை போன மணிவண்ணனே தூக்குமேடை விசையை இழுத்து உயிரை எடுப்பதாக படம் முடியும்.
படத்தின் தொழில்நுட்பக்கலைஞர்கள் பெயர் போடும்போதே தேவா வரான்... என்ற மெல்லிசை பாடல் பின்னணியில் ஒலிக்கும். அந்த பாடல் வரிகளில் தேவா வரான் என்ற தொடக்க வரிகள் பாடலின் நடுவிலும் இறுதியிலும் மூன்று முறை ஒலிக்கும்போதும் படத்தில் பெயரான தேவா என்ற பெயரை காட்டுவார்கள். எனக்கு தெரிந்து படத்தின் பெயர் மூன்று முறை நடு நடுவே காட்டப்படுவது இந்தப் படத்தில் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.
அய்யய்யோ அலமேலு மற்றும் குப்பம்மா என்ற பாடல் காட்சிகளின்போது இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்று எழுத்துக்கள் போடுவார்கள்.
குப்பம்மா பாடலில் சிவகுமாரும், மனோரமாவும் சொந்தக்குரலில் ஒரு சில (பேசி?!) பாடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தேவாவின் குரலில் இயக்குநர் சந்திரசேகரன் வாயசைப்பில் "கொஞ்சம் நில்லப்பா... தப்பிருந்தால் சொல்லப்பா..." என்ற சிறிய பாடல் ஒலிக்கும். இது விஜயின் முந்தைய படமான செந்தூரபாண்டியில் "ஆடாதடா ஆடாதடா மனிதா" என்ற பாடல் வெற்றியடைந்த பாதிப்பில் உருவானதாக இருக்கலாம்.

மெல்லிசை காதல் பாடல்களான ஒரு கடிதம் எழுதினேன்... அதில் என் உயிரை அனுப்பினேன் என்ற பாடலும் இப்போதும் கேட்க வைக்கும்.
சுரேந்தர் குரலில் சின்னப் பொண்ணு சின்னப் பையன் என்ற பாடலும் கேட்க இதமானதே.

மன்சூர்அலிகான் - மணிவண்ணன் நடிப்பில் "காப்பித்தண்ணி போடட்டுமா... டீத்தண்ணி போடட்டுமா" என்ற பாடல் இப்போதும் கிராமங்களில் அவ்வப்போது ஒலிப்பதை கேட்கலாம்.

விஜயின் ஆரம்ப கால படங்கள் எதுவுமே பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவரை பரவலாக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தன என்று சொல்லலாம்.
ஒரு முறை பார்க்கக்கூடிய படம். அவ்வப்போது கேட்கக்கூடிய பாடல்களைக் கொண்ட படம் இது.

2 comments:

  1. என்ன சார் இப்பதான் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தீங்களா? இப்ப போய் அந்த படத்தை விமர்சனம் பண்ண வேண்டிய காரணம் என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. வேற ஒண்ணும் இல்ல சார்... பள்ளியில் படித்த காலத்தி‍லேயே பகுதி நேரமாக திரையரங்கில் பணியாற்றிய அனுபவமும் நிறைய படம் பார்த்த அனுபவமும் உண்டு. அதனால் 1995 ஆம் ஆண்டில் வெளியான படங்களைப் பற்றி சிலவற்றை 25 வது ஆண்டில் நினைவூட்டலாம் என்பதால் இந்த பதிவை எழுதினேன்.

      Delete