Sunday, May 10, 2020

தக்காளி...

நான் திரும்ப வந்துட்டேன்... இளைய சமுதாயத்தின் மனசுக்குள்ளே... இப்படி சொல்றது விவசாயம்

இப்போது உலகெங்கும் ஏற்பட்ட அசாதாரண சூழலால் பெரும்பாலானவர்கள் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறார்கள்.

இன்னும் நிறைய பேர் வாழ்வதற்கு எது அத்தியாவசியம், எது ஆடம்பரம் என்பதை உணர்ந்து விட்டார்கள்.

ஊரடங்கு காலத்தில் காய்கறிகளையும் மளிகைப் பொருட்களையும் தேடித்தேடி வாங்கிக் குவித்தவர்கள்தான் அதிகம்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை புதியதாக போனை மாற்றவில்லை என்றால் தெய்வகுத்தமாகிவிடும் என்று யோசித்தவர்கள் கூட மளிகை, காய்கறிகள் வாங்கியதும் திருப்தி அடைந்து விட்டார்கள்.

90களில் ஒரு சில பட்டிமன்றங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கிண்டல் செய்வது என்றாலே வயலும் வாழ்வும் நிகழ்ச்சியைத்தான் பேச்சாளர்கள் கழுவி ஊற்றுவார்கள்.

நகரப்பகுதிகளிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் மனதில் விவசாயம் என்றால் அது கிராமத்தில் பொருளாதார நிலையில் கஷ்டப்படுபவர்களுக்கானது... அது மதிக்கத்தக்கது இல்லை என்பது போன்ற மனநிலை எப்படியோ உருவாகிவிட்டது.

ஆனால் 2000வது ஆண்டிற்கு பிறகு மீண்டும் பலர் விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக மென்பொருள் துறையில் பணியாற்றி குறிப்பிட்ட அளவு தொகை சேர்ந்ததும் நாலைந்து பேர் சேர்ந்து விவசாயப் பண்ணைகள் அமைக்கும்போக்கு, இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் போக்கு அதிகரித்திருப்பதையும் காண முடிகிறது.

ஆனால் இவற்றில் எந்த அளவு லாபம் கிடைக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை. லாபம் ஒருபக்கம் இருக்கட்டும். இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டு தோட்டம், மாடித்தோட்டம் என்றெல்லாம் செய்து வந்தவர்கள் அவர்கள் வீட்டு காய்கறி தேவைக்கு பெரிய அளவில் சிரமப்படவில்லை.

விவசாயம் செய்து விளைவித்து விற்பனை செய்து லாபம் ஈட்டுகிறோமோ இல்லையோ, நாம் உயிர்வாழ்வதற்கே இவை எல்லாம் அவசியம் என்பதை பல்வேறு தரப்பினரும் இந்த ஊரடங்கு காலத்தில் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள்.

அதன் விளைவுகள் எப்படி இருக்கிறது என்றால், தற்போது சில நாட்களாகவே காய்கறி, பழங்கள் விற்பனைக்கடைகள் சாலையோரங்களில் அதிகரித்திருப்பதைப் போலவே காய்கறி, கீரை விதைகள் வியாபாரமும் நிறையவே நடக்கிறது.

பத்தாண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் நண்பரிடம் பேசியபோது, அவர் விவசாயம் செய்து வரும் பகுதிகளில் நிறையபேர் பல்வேறு காரணங்களால் இதுநாள் வரை தரிசாக போட்டு வைத்திருந்தவர்கள் கூட தற்போது நிலங்களை உழுது விதைத்திருக்கிறார்களாம்.

மனிதர்கள் உயிர்வாழ முக்கிய தேவைகளில் ஒன்றான உணவு உற்பத்தியைப் பொறுத்தவரை எந்த காலத்திலும் தேவைகளுக்கு குறைவிருக்காது என்பது இதன் சாதகமான பக்கம்.

விவசாயத்தில் ஒரு சில பாதகங்களும் இருக்கின்றன. ஆனால் அது மனிதர்களாகிய நம்முடைய முயற்சியின்மை, மாத்தி யோசித்து திட்டமிடாதது உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்படும் பாதிப்புகள்தான். அவற்றை சரியான முறையில் கவனித்து சரி செய்தால் விவசாயம் செய்தாலே லாபம்தான் என்ற நிலையை விரைவில் எட்டிவிடலாம்.

விளைபொருளை பாதுகாத்து வைப்பது, மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றி வைப்பது இந்த சவால்களில் வெற்றி அடைந்து விட்டால் விளை பொருளுக்கு விலை இல்லாமல் நஷ்டம், விற்பனை ஆகாமல் வீணாகுதல் என்ற பாதிப்புகள் ஏற்படாது.

வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நல்ல முறையில் வழிகாட்டுதல்கள் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

பொறுமை, ஆர்வம், விடாமுயற்சி இருந்தால் நல்ல பலனை பெறலாம் என்பது அவர்கள் சொல்லும் செய்தி.

பெரும்பாலும் வேளாண்துறையின் அறிவுரைகள், ஆலோசனைகள், வழிகாட்டல்கள், மானியம் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெரிய அளவில் விவசாயம் செய்பவர்கள்தான் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்களாம்.

சிறு குறு விவசாயிகளில் ஆர்வத்துடன் பல்வேறு விசயங்களை தெரிந்து கொண்டு லாபம் பார்ப்பவர்கள் குறைவுதான். மற்றவர்கள் ஏதோ ஒரு சில இடையூறுகளால் அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் பல்வேறு திட்டங்களையும் ஆலோசனைகளையும் நிதியுதவியையும் பெறுவதற்கு எங்களை அணுகுவதே இல்லை. அதனாலும் அவர்கள் நஷ்டத்தை சந்திக்கிறார்கள் என்று வேளாண்துறையில் பணிபுரிபவர்களே கூறுவதாக ஒருவர் சொன்னார்.

நகரப்பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் பெரிய அளவில் செய்ய வேண்டாம். 100 அல்லது 200 சதுரடி அளவில் சின்ன அளவில் செய்தால் அதன் பலனை அவர்களும் அனுபவிப்பதோடு அவர்களுக்கு நெருங்கிய நண்பர்களுக்கும் கொடுக்கலாம்.

இதனால் என்ன லாபம் என்று கேட்பவர்களுக்கு இரண்டு விசயங்களை என்னால் சொல்ல முடியும். ஒன்று, காலையிலும் மாலையிலும் தோட்ட பராமரிப்பு செய்தால் நம் உடலுக்கு நல்லது.

இரண்டாவது, இதனால் தொலைக்காட்சியில் மிக அதிக நேரம் செலவழிக்கும் போக்கு குறையும். இது மனதுக்கு நல்லது.

காரைக்கால் பண்பலையில் பேசிய விவசாயி ஒருவர் சிறப்பான யோசனையை நினைவூட்டினார். அதாவது பணம் இருக்கிறது என்று நிறைய இளைஞர்கள் தொடக்கத்திலேயே 5 ஏக்கர் 10 ஏக்கர் அளவில் பண்ணை விவசாயம் செய்வதாகவும், பத்து பதினைந்து மாடுகள் வளர்க்கிறேன் என்று பெரிய அளவில் தொடக்கத்திலேயே முதலீடு செய்துவிட்டு அவதிப்படுகிறார்களாம்.

அவர் என்ன சொல்கிறார் என்றால், முதலில் 10 செண்ட் நிலம் (சுமார் 4300 சதுரடி) அளவில் சின்னதாக விவசாயத்தை தொடங்குங்கள்.

ஒரு மாடு வாங்குங்கள். ஒன்றிரண்டு ஆண்டுகள் சில நெளிவு சுழிவுகளை கற்றுக் கொண்டு படிப்படியாக விரிவுபடுத்துங்கள்.

பிறகு பெரிய அளவில் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்வதும், மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, கோழி வளர்ப்பு போன்றவற்றை லாபகரமாக செய்ய முடியும்.

விவசாயத்தில் விளைச்சல் இல்லாமல் போவதும் நஷ்டம் ஏற்படுவதும் இயல்புதான். ஆனால் பட்டம் பார்த்து சரியான ஆலோசனையுடன் உரிய காலத்தில் விவசாயம் செய்தால் நாலு முறை லாபம் கிடைத்தால் ஒரு முறை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்த நஷ்டம் கூட நம்மால் தாங்கக் கூடிய அளவில்தான் இருக்கும் என்றார்.

அவர் ஏன் அப்படி சொன்னார் என்றால், இளைஞர்களின் ஆர்வத்தை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் சிலர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பெரிய அளவில் செலவு இழுத்து விட்டுவிடுகிறார்களாம்.

இதை ஒரு சில இடங்களில் நேரடியாக கண்டிருக்கிறார். அதனால்தான் இந்த தகவலை சொன்னார் அவர்.

நாங்கள் முன்பு வசித்து வந்த வீட்டிற்கு செல்லும் நடைபாதையில் ஒருசில நேரங்களில் சில செடிகள் தானாகவே முளைக்கும். கண்டங்கத்திரி, குப்பைமேனி ஆகியவற்றைதான் அதிகமாக பார்த்திருக்கிறேன்.

அங்கே கொல்லைப்புறத்தில் இருபதாண்டுகளுக்கு முன்பு வைத்து வளர்த்த முருங்கை மரத்தின் காய், கீரை இரண்டுமே நல்ல சுவையாக இருக்கும். இப்போதும் அவ்வப்போது காய்த்து வருகிறது.

தற்போது செங்கல் பரப்பிய நடைபாதையில் நிறைய இடுக்குகள் இருந்த இடத்தின் அடியில் இருந்த மண்ணில் இருந்து தானாகவே தக்காளி செடி முளைத்து உருவாகியுள்ளது.

எந்த பராமரிப்பும் செய்யாமல் தானாகவே உருவான அந்த செடியில் காய்த்த தக்காளியை பறித்து வந்த பிறகு மெதுவாக சுமார் 10 நாட்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக பழுத்து வருகிறது.

இயற்கைக்கு எவ்வளவு சக்தி உள்ளது?... ஒரு விதை தன்னுள் எத்தனை அதிசயங்களை வைத்திருக்கிறது என்பதை நேரடியாகவே உணர்ந்தேன்.

நாம் கழுவி ஊற்றிய நீரில் இருந்த தக்காளி விதைகளே இப்படி வளர்ந்து பலன் தரும் என்றால், உண்மையான ஈடுபாட்டுடன் இந்த செயலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற சிந்தனையை கிளறி விட்டுள்ளது இந்த தக்காளி.

"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி...விவசாயி..."

"மணப்பாறை மாடு கட்டி... மாயவரம் ஏரு பூட்டி..."

போன்ற விவசாயம் குறித்து வந்த பழைய பாடல்களை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கத் தோன்றுகிறது.

Thiruvarur Saravanaa
திருவாரூர் சரவணா

No comments:

Post a Comment