Tuesday, May 12, 2020

ஜெமினி

பொதுவாக சிறைத்தண்டனை என்பது தவறிழைத்தவர்கள் தங்கள் தப்பை உணர்ந்து திருந்தச்செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது எந்த அளவுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது? உண்மையில் என்னதான் நடக்கிறது...?

இதற்கான சின்ன விளக்கம் 18 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜெமினி திரைப்படத்தில் இரு வரி வசனத்தில் சொல்லப்பட்டிருந்தது.

மிக ஜாலியான எண்டர்டெயின்மெண்ட் படம் என்று ஒரு சாரரும், இந்த மாதிரியான மசாலா படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழ் சினிமாவின் உலகத்தரம் கெட்டுவிடும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. அது வேறு விசயம்.

ஓ போட்ட ஜெமினி படம் சாதாரண மசாலாதான்னு சிலர் சொல்லுவாங்க. அந்தப் படத்துலயும் நல்ல மெசேஜ் நிறையவே இருக்குறதை நான் கவனிச்சிருக்கேன். வெறும் பாடல்களால மட்டும் அந்தப்படம் நல்லா ஓடலை. கலாபவன்மணியோட மிருகக்குரல் மிமிக்ரியும் படத்தோட அதிரடி வெற்றிக்கு ஒரு காரணம்னு விக்ரமே சில நேர்காணல்களில் சொல்லியிருக்கார்.

முதலில் சில நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

ஜெமினியில் தேஜாவின் கையாள் ஒருவர், "இந்த சரக்கை மட்டும் அப்படியே கை மாத்தி விட்டா கோடி ரூபாய் ஓடி வரும்." என்று சொல்லவும்,

உடனே தேஜா "நீ எவ்வளவு படிச்சிருக்க?" என்று கேட்பார்.

"ரெண்டாங்கிளாஸ்" என்று பெருமையுடன் கூறுவார் அந்த நபர். வில்லன் சம்மந்தப்பட்ட காட்சி என்பதை மறந்து காமெடிக்காட்சியைப் போல் படமாக்கியிருப்பார்கள்.

அதற்கு தேஜா கொஞ்சம் கூட சிரிக்காமல், "நம்ம கேங்லயே அதிகமா படிச்சுட்டோம்னு திமிர்ல பேசுறியா"ன்னும்பார். பெரிய நகைச்சுவை நடிகர்களின் காட்சிக்கு சவால் விடும் வகையில் சிரிப்பை ஏற்படுத்தும்.

கமிஷனர், ஜெமினி, தேஜா இருவரையும் ஒரு செல்லில் அடைத்து வைத்திருப்பார்கள். ரொம்பவும் வெறுத்துப் போன ஜெமினி, "திருந்தித் தொலையேண்டா"என்று தேஜாவைப் பார்த்து சொல்வார்.

அதற்கு தேஜா, அவர் "நான் என்ன தப்பு பண்ணினேன்... திருந்தறதுக்கு..." என்று கேட்கும்போது ஒரு அப்பாவித் தனம் தெரியும்.

இது மாதிரி வில்லன் வரும் காட்சிகள் அனைத்தையும் நகைச்சுவையுடனேயே படமாக்கியிருப்பார்கள்.

ஆனால் படத்தில் நகைச்சுவைக்காக என்று இருந்த காட்சிகளில் எனக்கு சிரிப்பே வரவில்லை என்பது வேறு விசயம்...  

படத்தில் நல்ல கமிஷனரா வர்ற மலையாள நடிகர் முரளி, "குற்றவாளிகளைத் திருத்துறதுக்குதான் சிறைச்சாலைன்னா தண்டனை முடிஞ்சு வர்ற நபர்கள் தவறு செய்யக்கூடாது... ஆனா நிஜத்துல அப்படி நடக்குறது இல்லையே. ஏன் அப்படி?

சட்டம்னுங்குறது ஃப்ரிட்ஜ் மாதிரி ஆயிடுச்சு. தண்டனை அனுபவிக்க உள்ள போறவங்க வெளியில வரும்போது எந்த மன மாற்றமும் இல்லாம அப்படியே  ஃப்ரெஷ்ஷா வந்து கிரைம் பண்றாங்க. சமூகமும் சில அதிகாரப் பொறுப்புகளும் அவங்க திருந்தி வாழ்றதை அனுமதிக்கிறது இல்லை. இந்த நிலைமையை மாற்ற எதோ என்னாலான முயற்சி. அவங்க திருந்த வாய்ப்பு ஏற்படுத்தி தர்றேன்."அப்படின்னு சொல்வார்.

எல்லாரும் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம் இது.

படத்தில் ஒரு சில வசனங்கள் மிகவும் கூர்மையாக இருக்கும்.

கமிஷனராக வரும் முரளியை போக்குவரத்துத்துறை உயரதிகாரியாக மாற்றம் செய்து விடுவார்கள். அங்கே அவரை விக்ரம் சந்திக்க செல்லும்போது சில பைல்களை தூசுகளுடன் எடுத்துக் கொண்டிருப்பார்.

அப்போது அவர், "இந்த பைல்களை எல்லாம் இப்பதான் தூசி தட்டிகிட்டு இருக்கேன்... எத்தனை பேர் தும்முவாங்களோ தெரியாது..." என்பார். அர்த்தத்துடன் கூடிய வசனம் இது.

ரவுகள் அட்டகாசம் அதிகரித்து விட்டதா... அவர்களை வளர்த்து விட்ட அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவில்லையா... உடனே என்கவுண்டர் செய்து விடுங்கள் என்றுதான் நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம்...

அதை விடுத்து, "அவர்கள் திருந்தி வாழ சந்தர்ப்பம் தருவோமே..." என்று நேர்மறை சிந்தனையுடன் அந்த கமிஷனர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஏவிஎம் நிறுவனத்தின் பொழுது போக்கு படங்களைத்தான் அதிகமாக எடுப்பார்கள் என்றாலும், இந்தப்படத்தில் இருந்த பொழுது போக்கு அம்சங்களான ஓ போடு பாடலும், கிரண் கவர்ச்சி காட்சிகளும், கலாபவன்மணி வில்லத்தனமான நடிப்பும் பேசப்பட்ட அளவுக்கு சமூக சிந்தனை உள்ள கருத்துக்களும் காட்சிகளும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.


No comments:

Post a Comment