Thursday, May 14, 2020

காணவில்லை பட்டியலில் திண்ணை

கடந்த பல ஆண்டுகளாக, திண்ணை வைத்து வீடு கட்டுவதில்லை. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கவும் மறுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கிராம வீட்டின் திண்ணை அளவுள்ள வீடு பெரிய நகரப்பகுதிகளில் பத்தாயிரம் ரூபாய் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும். அது தவிர குடிக்க தண்ணீரை பணம் கொடுத்து வாங்குகிறார்கள். அதற்கு கூட பணத்தையும் கொடுத்து காத்திருக்க வேண்டிய நிலையும் இருக்கிறது.  

சிறிய நகரங்கள் முதல் பெரிய மாநகராட்சி வரை இப்படி நிலை என்றால், கிராமங்களில் கூட சமீப காலங்களில் கட்டப்படும் வீடுகளில் திண்ணைகளை காணவில்லை. அதற்கு பொருளாதார காரணம் மட்டுமே என்று கூறி கடந்து செல்ல முடியாது.

அப்படி என்னால் இந்த நிலைக்கு யார் காரணம் என்று பார்த்தால் இதற்கெல்லாம் அரசியல்வாதிகளை குற்றம் சொல்லத் தேவையில்லை. பொதுமக்கள்தான் காரணம். இன்னும் தெளிவாக சொன்னால் சமூகவிரோதிகள் என்று இனம் பிரித்துக் கூறலாம்.

முன்பெல்லாம் திண்ணைகளில் பலரும் கூடி பேசினாலும் அது ஏதோ வெட்டிப்பேச்சு என்ற அளவில்தான் இருக்கும். உண்மையில் வழிப்போக்கர்கள், அடுத்தடுத்த வீடுகளில் ஏதாவது சுப நிகழ்வு நடைபெறும்போது சம்மந்தப்பட்ட வீடுகளின் விருந்தினர்கள் அங்கே இடம் போதாமல் எதிர்வீடுகள், அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள திண்ணைகளில் தஞ்சமடைந்தார்கள்.

1990 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஏன், தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழில் துவங்கிய 1993ஆம் ஆண்டு வரை இந்த நிலைதான்.

பிறகுதான் தொலைக்காட்சிகளில் சென்னை தொலைக்காட்சி அலைவரிசை 1 என்ற காட்சி மாறியது. வீடுகளின் முகப்பும் மாறத் தொடங்கியது.

யாரும் மாலை வேளைகளிலோ, பகல் நேரத்தில் தலைச்சுமை வியாபாரிகளுடனோ அமர்ந்து உரையாடும் போக்கு குறையத் தொடங்கியது. அதற்கு தொலைக்காட்சி மட்டும் காரணமில்லை. உலகமயமாக்கல் காரணமாக பல்வேறு தொழில்கள், கடைகள் பெருகியதன் விளைவும் இதனால் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் முக்கிய காரணம்.

வீட்டைச் சேர்ந்தவர்களும் அக்கம்பக்கத்தினரும் பயன்படுத்தாமல் விட்ட திண்ணைகளை வேறு ஒரு பகுதியினர் வேறு மாதிரியாக பயன்படுத்த தொடங்கினார்கள்.

ஆம். முன்பெல்லாம் ஒருவன் குடிக்கிறான் என்றால் அவனை மிகவும் மட்டமாக பார்த்து, ஏளனமாக மதித்த காலம் காணாமல் போய், யாராவது குடிக்காமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களை மனநோயாளியாக இருப்பார்களோ என்று சந்தேகிக்கும் காலம் தொடங்கியது.

இதனால் ஊருக்கு ஒதுக்குப்புறம், புதர் மறைவு, சுடுகாட்டு மண்டபம் என்று பதுங்கி பதுங்கி குடித்தவர்கள் எங்கே அமர்ந்து கொள்ள வசதியான இடம் இருக்கிறதோ அது சாலை ஓரம், பள்ளி வளாகம், திண்ணை, மாடிப்படி என்று எந்த வடிவில் இருந்தாலும் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டில், துணை உணவு இருந்த பொட்டலங்கள் என்று குப்பைகளை போடுவதுடன் சமயத்தில் வாந்தி எடுத்து வைத்துவிட்டும் செல்லத் தொடங்கினார்கள்.

இதுதான் திண்ணைகள் காணாமல் போவதற்கு முக்கியமான காரணம்.

இப்போது குற்றவாளிகள் அதிகரித்திருப்பதையும் மறுக்க முடியாது. முகவரி கேட்டு வருபவர்களும், குடிக்க தண்ணீர் கேட்டு வாசலில் அமர்பவர்களும் கூட வீட்டில் உள்ள பெண்களையும் வயதானவர்களையும் தாக்கி விட்டு (சமயங்களில் உயிரையும் போக்கிவிட்டு) கொள்ளை அடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

நான் நல்லவனாக இருக்க தயார்தான். ஆனால் அந்த மனநிலையை பயன்படுத்தி என்னை அழித்து விட்டு ஒருவன் என் செல்வத்தை கொள்ளையடித்துச் செல்ல தயாராக இருக்கும்போது நான் எப்படி திண்ணை வைத்து வீடு கட்டுவதையும், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதையும் அச்சமின்றி செய்ய முடியும் என்று பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

ஆனால் இப்போதும் சிலர் வீட்டு வாசலில் மரம் வளர்த்து, அதன் நிழலில் ஒரு பானையில் குடிக்க தண்ணீர் வைத்திருக்கிறார்கள். இதையும் ஒரு சில மதுப்பிரியர்கள் (?!) பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இது போன்ற நடைமுறை சிரமங்களை தாண்டியும் சமூகத்துக்கு உதவி செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த நம்பிக்கையும், செயல்பாடுகளும்தான் உலகத்தை இந்த அளவுக்காவது நல்லவிதமாக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.


2 comments:


  1. வீட்டு திண்ணையில் இருந்து பக்கத்து வீட்டு ஆட்களுடன் பேசுவதை தவிர்த்து இப்போது இணையம் மூலம் பக்கத்து ஊர் மற்றும் நாடுகளுடன் பேச ஆரம்பித்துவிட்டதும் இந்த திண்னைகள் காணமல் போனதற்கு காரணம் என்று சொல்லாம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே... இப்போது கூட திண்ணையில் உட்கார்ந்தால் அவரவர் தங்கள் கையில் உள்ள செல்பேசி திரையில் இருந்து பார்வையை விலக்குவது போல் தெரியவில்லையே...

      Delete