Tuesday, May 5, 2020

வாராரு... வாராரு... அழகர் வாராரு...

டி.எம்.செளந்தரராஜன் பாடிய பல்வேறு முருகன் பக்திப்பாடல்கள் நம் மனதை இப்போதும் உருகச் செய்து கொண்டிருக்கின்றன.

எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் குரலில் "ஹரஹரசிவனே அருணாச்சலனே அண்ணாமலையே போற்றி..." பாடல்

ஜேசுதாஸ் குரலில் "ஹரிவராசனம்..." பாடல்

இளையராஜா குரலில் "ஜனனி... ஜனனி..." பாடல்

ஆகிய பாடல்களை பக்திப்பரவசத்தோடு கேட்டு மனம் உருகிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

Courtesy: One India

மேலே குறிப்பட்ட பாடல்களுக்கு எல்லாம் வயது முப்பது முதல் அறுபது ஆண்டுகள் இருக்கும்.

1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஜயகாந்த் நடிப்பில் தேவாவின் இசையமைப்பில் கள்ளழகர் என்ற படம் தமிழில் வெளிவந்தது. இந்தப் படத்தில் கிளைமேக்ஸ் காட்சிக்கு முன்பு இடம்பெற்ற பாடல் "வாராரு... வாராரு... அழகர் வாராரு...".
இந்தப்பாடலை எழுதியவர் வைரமுத்து. தேவாவுடன் இணைந்து பாடியிருப்பவர் எஸ்.ஏ.ராஜ்குமார். படத்திற்கு ஒளிப்பதிவு தங்கர்பச்சான். பாடல் காட்சி உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக படம் வெளியாவதற்கு முதல் வருடம் உண்மையாகவே மதுரையில் நடைபெற்ற திருவிழாவை பல்வேறு கோணங்களில் படமாக்கி விட்டார்களாம்.
ஆம்... இதனை என்னதான் துணை நடிகர்களைக் கொண்டு பிரமாண்டமான செட் போட்டோ, கோடிக்கணக்கில் செலவழித்திருந்தாலோ இந்த காட்சிகளை நிஜம் அளவிற்கு பிரமாண்டமாக படமாக்கியிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா மதுரை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய மூன்று இடங்களில் வைகை ஆற்றில் நடைபெறுகிறது.

மூன்று ஊர்களிலுமே அழகர் மண்டகப்படி நடைபெறும் இடங்களில் இந்த பாடல்தான் ஒலிக்கிறது. அதிலும் பாடலின் நிறைவாக வரும் வரிகளைக் கேட்கும்போதே நம் மனம் சிலிர்ப்பதை உணர முடியும்.
Courtesy: Vikatan.com
மற்ற பக்திப்பாடல்கள் எல்லாம் மனம் அமைதியுடன் நம்மை உருகச் செய்கின்றன என்றால், இந்தப்பாடல் துள்ளல் இசையுடன் நாமே நேரில் சென்று திருவிழாவை கண்டு களிக்கும் பரவசத்தைக் கொடுக்கிறது.

சாமி கண்டதும் பாதி சனங்க சாமியேறி ஆடுதே
சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுதே

உச்சி அழகர் பார்த்த கிறுக்கு உச்சந்தலையில் ஏறுதே
சண்டை மறந்து சத்தம் மறந்து சச்சரவுக தீருதே!

வெள்ளி மலையில சாமியடி - இது
ஏழைங்க பக்கமே நிக்குமடி

நன்மையடி பெண்ணே நன்மையடி - இனி
நாடுமுழுக்க நன்மையடி

தொட்டாத் தொலங்கும் காலமடி - நம்ம
வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி

கொட்டோ கொட்டுன்னு கொட்டுமடி - செல்வம்
கூரையைப் பிரிச்சுக் கொட்டுமடி

வந்தோம் திரண்டு வந்தோம் மதுரை வந்தோம்
அழகர் வாழியவே

கண்டோம் அழகர் கண்டோம் மகிழ்வு கொண்டோம்
மதுரை வாழியவே

கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம்
இதயம் வாழியவே!'

இந்த பாடல் வரிகள் ஒலிக்க, இப்போதும் வலைதளங்களில் மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை படம்பிடித்த பல்வேறு வீடியோக்கள் இருக்கின்றன.

படத்தில் விஜயகாந்த், நாசர் மற்றும் நடிகர்கள் வரும் காட்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால் பாடல், திருவிழாவின் பிரமாண்டம் எல்லா வீடியோக்களையும் பரவசத்தோடு பார்க்கத் தூண்டுகிறது.

இந்த திருவிழாவின் பிரமாண்டம் 2020 ஆம் ஆண்டு உலக சூழ்நிலை காரணமாக இல்லை என்பதால் பழைய நினைவுகளைக் கொண்டு பரவசமடைவோம்...

கள்ளழகர் திரைப்படம்
கதை K.அன்புமணிராம்
வசனம் இயக்குநர் மகேந்திரன்
ஒளிப்பதிவு தங்கர்பச்சான்
இசை தேவா
தயாரிப்பு ஹென்றி
இயக்கம் பாரதி 

No comments:

Post a Comment