Thursday, May 14, 2020

பல்லவி அனுபல்லவி டைட்டில் இசை - வாழ்க்கை திரைப்பட பாடல்

மணிரத்னம் 1983 ஆம் ஆண்டு கன்னடத்தில் முதல் படம் இயக்கினார். லெட்சுமி, அனில்கபூர் நடித்த அந்த படத்தின் டைட்டில் இந்த வீடியோவில் படம் ஆரம்பித்த 3.44 நிமிடம் முதல் 6.59 வரை இருக்கிறது.


https://www.youtube.com/watch?v=upSKGfdJnOw

அந்த இசை தமிழில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த வாழ்க்கை திரைப்படத்தில் பி.சுசீலா குரலில் பாடலாகவே இடம்பெற்றுள்ளது. டிஸ்கோ நடனப் பின்னணியில் இந்த பாடலின் இசையை பொருத்தமாக பயன்படுத்திய வாழ்க்கை படத்தின் இயக்குனரையும் பாராட்டியே தீர வேண்டும். 

https://www.youtube.com/watch?v=4X6mjS7pDKY

ஏ.ஆர்.ரகுமானின் சில பாடல்களை ஹிந்தியிலும் தமிழிலும் கேட்டிருக்கிறேன். அவற்றில் பல படங்கள் ரீமேக் அல்லது டப்பிங் கிடையாது. முழுக்க வேறு படம். அப்போதுதான் எல்லா மொழிக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் தனி ஒப்பந்தம் போட வேண்டும். இல்லை என்றால் இசையமைப்பாளர் ஒரு மொழிக்கு போட்ட டியூனை வேறு மொழியில் வேறு படத்துக்கு விற்றுக் கொள்ள முடியும் என்ற விபரம் தெரிந்தது.

அது மட்டுமல்ல... இது இப்போது வந்த வழக்கம் இல்லை. காலம் காலமாக இருந்து வரும் விசயம்தான் என்பதையும் புரிந்துகொண்டேன்.

இப்போதெல்லாம் படத்தில் பங்கேற்றவர்கள் பெயர்களை அரைநிமிடம் அல்லது ஒரு நிமிடத்திற்குள் சுருக்கமாக போட்டுவிட்டு கதைக்குள் சென்று விடுகிறார்கள். நடிகர்கள் முதல் லைட்பாய் வரை எல்லாருடைய பெயர்களையும் ஆங்கில படங்களில் பின்பற்றப்பட்ட முறையில் படத்தின் இறுதியில் வைத்து பிலிமை வீணாக்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆளில்லா கடையில் டீ யாருக்கு ஆற்ற வேண்டும் என்று தியேட்டர் ஆப்ரேட்டர்கள் நாலுபெயர் மேலெழும்போதே புரொஜக்டரை நிறுத்தி விடுவார்கள். இப்போது டிஜிட்டலில் இன்னும் வசதியாகப் போய்விட்டது. கம்ப்யூட்டரில் பாடல் ஓடிக்கொண்டிருக்கும் விண்டோஸ் மீடியா பிளேயரை நிறுத்துவது போல் பட்டென்று நிறுத்தி விடுகிறார்கள்.

அது சரி, படத்தில் பணியாற்றியவர்களைத் தவிர வேறு யார் படத்தின் இறுதியில் வரும் டைட்டிலை படிக்கப் போகிறார்கள் என்று கேட்கிறீர்கள். அதுவும் சரிதான்.

ஆனால் அந்த இறுதி டைட்டில் காட்சியின்போது படத்தில் விடுபட்ட கேள்விகளுக்கு விடை தருவதைப் போல் அல்லது கட்டுரைக்கு முடிவுரை மாதிரி ஒரு சில காட்சிகளை வைத்திருப்பார்கள். அந்த படங்களுக்குதான் சிக்கல்.

உதாரணம், சில மாதங்களுக்கு முன்னால் சந்தானம் நடித்து வெளிவந்த A1 படத்தில் சாய்குமார் நீதான் A1 என்று சொன்னதும் அந்த டைட்டில் வரும். அப்போதே தியேட்டரில் புரொஜக்டரை நிறுத்தி விட்டார்கள்.

செயற்கைக்கோள் தொலைக்காட்சியில் போடும்போதும் அத்துடன் நிறுத்தி விட்டார்கள். ஆனால் எனது நண்பர் ஒருவர் இந்த படத்தை பார்த்த தியேட்டரில் அதன்பிறகும் சந்தானம் மாமனார் குடும்பத்தில் நடக்கும் காமெடிகள், மொட்டை ராஜேந்திரன், சாய்குமார் சம்மந்தப்பட்ட காட்சிகள் என்று சுமார் 4 நிமிடம் படம் காட்டியிருக்கிறார்கள்.

அஜீத் நடித்த வரலாறு திரைப்படத்திலும் இறுதி டைட்டில் ஓடும்போதுதான் படத்தில் இரண்டு அஜீத்தும் தொடர்புடைய சம்பவங்களில் என்ன நடந்தது என்று பார்வையாளர்களுக்கு காட்டப்படும்.

நேர்கொண்ட பார்வை படத்தை எடுத்துக் கொள்வோம். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் முதலில் என்ன நடந்தது என்ற உண்மை தெரியக்கூடாது என்ற உத்தியின் அடிப்படையில் அந்த காட்சிகளை படத்தின் தொடக்கத்தில் ஒன்றிரண்டு வசனத்துடன், திரையை இருட்டாக விட்டிருந்தார்கள்.

படத்தின் மையக்கருவான அந்த வன்முறை சம்பவம் என்ன என்பதே படத்தின் இறுதி டைட்டிலின்போதுதான் காட்டப்படும். ஆனால் இதை புரிந்து கொள்ளும் ரசனையுடன் கூடிய தியேட்டர் ஆப்ரேட்டர்களும் இப்போது இருப்பதாக தெரியவில்லை. அதை நின்று பார்க்கும் பொறுமையும் நமது ரசிகர்களிடம் இருப்பதாக தெரியவில்லை.

அதனால் இயக்குநர்கள் தங்களது திறமையைக் காட்டுவதாக நினைத்துக் கொண்டு தியேட்டர்களிலும், தொலைக்காட்சிகளிலும் படத்தின் இறுதிக் காட்சியில் முதல் வரி டெக்னீஷியன் பெயரைப் பார்த்ததுமே படத்தை நிறுத்தி விடுகிறார்கள். அப்படி இருக்கும்போது யாரும் பார்க்க வாய்ப்பில்லாத இந்த காட்சிகளை எண்ட் டைட்டிலின் போது வைக்காதீர்கள். சந்தாதாரர்கள் பார்க்கும் டிஜிட்டல் பார்மெட்டில் கூட இந்த காட்சிகளை கட் செய்துதான் பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து ஜாக்கிசான் படத்தில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதை இறுதி டைட்டிலின் போது நின்று பார்த்துச் செல்லும் ரசிகர்கள் இருந்தார்கள் என்பதால் தியேட்டர்களிலும் அவை முழுமையாக திரையிடப்பட்டதை அறிவேன்.

அதன் பிறகு ஜெமினி படத்தில் இறுதியில் ஓ போடுபாடல் இன்னொரு முறை வரும். அதனால் அந்த படத்தை நின்று பார்த்து செல்லுங்கள் என்று படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு பத்து நிமிடம் முன்பு சிலைடு போட்டார்கள்.

அந்தப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் மட்டும்தான் பாடல்களை பார்க்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. இப்போது எல்லோருடைய உள்ளங்கையிலும் பிடித்த பாடலை திகட்டும் அளவுக்கு திரும்பத்திரும்ப பார்க்கும் வாய்ப்பு.

அதனால் சொல்ல வந்ததை முழுவதுமாக சொல்லிவிட்டு கடைசியாக A Film By ................... அப்படின்னு போடுங்க போதும். அதை விடுத்து, டைரக்டர் பெயர் தனியாக தெரிய வேண்டும் என்று திரையை இருட்டாக்கி பெயரைப் போட்டு விட்டு பிறகு மீண்டும் முடிவுரை சொன்னால் அதை தியேட்டரிலும் காட்டுவதில்லை. தொலைக்காட்சிகளிலும் காட்டுவதில்லை.

அவ்வளவு ஏன், விஜய் படம் ஜில்லாவை சன் டிவியில் போடும்போது மோகன்லால், விஜய் ஆடிப்பாடும் பாடல் காட்சி தொடக்கமும் முடிவும்தான் இருந்தது. நடுவில் உள்ள சரணமும் ஜீவா வந்து ஒரு காட்சியில் ஆடும் காட்சிகளைக் கூட காணவில்லை.

எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை, படம் எடுக்கும்போது உங்களுக்கு பிடிக்கிறது என்பதற்காக போரடிப்பது போன்ற காட்சிகளை படத்தில் வைக்காதீர்கள். நீங்கள் எடிட்டிங்கில் வெட்டவில்லை என்றால் தியேட்டர் ஆப்ரேட்டரே வெட்டி விடுவார் என்று சொன்னார்.

இப்போது தியேட்டர் ஆப்ரேட்டர் மட்டுமல்ல, செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆப்ரேட்டரும் அந்த வேலையை செய்து விடுகிறார். போரடிக்கும் காட்சிகளை மட்டுமல்ல, விளம்பர நேரத்தை சமன் செய்வதற்காக ஏன், எதற்கு இந்த காட்சி என்பதை கொஞ்சம் கூட யோசிக்காமல் தூக்கி விடுகிறார்கள்.

இங்கே நிலவரம் இவ்வளவுதான்.


No comments:

Post a Comment