Monday, June 1, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 23

அத்தியாயம் - 23 - புத்தக பார்சலில் மாஞ்சாநூல்

  • பொதுவாக, நீரில் ஆக்சிசனின் அளவு 8 முதல் 15 மில்லி கிராம் /லிட்டர் -ஆக இருக்க வேண்டும். வெப்ப விளைவின் காரணமாக நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவதினால் நீர் மாசுபடுகின்றது. இதன் விளைவு: நீரில் உள்ள நுண்ணுயிரிகளான நன்னீர் பாக்டீரியாக்கள் ஆக்சிசன் குறைவால் இறக்க நேரிடும். இதனால் நீர்வாழ் உயிரினங்களான மீன்கள் அழிகின்றன. (எ.கா: சாக்கடைக் கழிவுநீர், விலங்குகளின் எச்சம் & கழிவுநீர், காகிதத் தொழிற்சாலைக் கழிவுநீர் உள்ளிட்டவை நன்னீரில் கலப்பது) தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் கலப்பதனால் நீர் மாசடைகிறது. இதன் விளைவு:  குடிநீராகவும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாது, தோல் புற்றுநோய்கள் ஏற்படும், நரம்பு மண்டலம், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படுகின்றன; இரும்பு துருப்பிடிக்கிறது. விவசாயத்தில் மகசூல் குறைகின்றது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

அண்ணாமலையும்நல்லதம்பியும் அலுவலகத்திற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும்போதே மொபைல் போன் ஒலித்தது.

வண்டியை ஓரங்கட்டி நிறுத்திய அண்ணாமலைபோனை அட்டன் செய்து கொண்டேநல்லதம்பியை ஓட்டுமாறு சைகையால் சொன்னார்நல்லதம்பி ஏறி உட்கார்ந்ததும்பின்னால் அமர்ந்து கொண்டு தொடர்ந்து பேசினார்.

சுமார் பத்து நிமிடங்கள் பதில் எதுவும் பேசாமல் எதிர்முனை பேசியதை மட்டுமே கேட்டு வந்தார்.

அலுவலகத்துக்குள் வந்ததும், ‘‘ஏதாவது திருப்பமா மல...?’’ என்ற நல்லதம்பியின் குரலில் ஆர்வம்.

‘‘நல்லதம்பி... சமீப காலமா போன்இமெயில்சிசி டிவி கேமரா இது மாதிரி டெக்னாலஜியினாலதான் நிறைய கேசுல குற்றவாளிகளை சரியா மடக்கி பிடிக்க முடியுது...

அதை நம்மளை விடசொக்கநாதனை தாக்கின நபர் அல்லது நபர்கள் நல்லாவே புரிஞ்சுகிட்டு திட்டம் தீட்டியிருக்காங்க...

அனில்கும்ளே பாகிஸ்தானுக்கு எதிரா ஒரு இன்னிங்க்ஸ்ல பத்து விக்கெட் எடுத்தப்பமறு முனையில பந்து வீசின ஸ்ரீநாத் சொன்னது நினைவிருக்கா...?’’

‘‘அப்பல்லாம் நான் கிரிக்கெட் பார்க்குறது இல்லை தல... இப்பதான்...’’ என்று நல்லதம்பி இழுக்கவும்,

‘‘இப்போ மட்டும் நீ கிரிக்கெட்டா பார்க்குற?... ஐபிஎல்ல சியர்ஸ் கேர்ள்ஸ் ஆடுறதைப் பார்க்குறவன்தானே நீ... அதை விடு...

பந்து வீசி விக்கெட் எடுக்குறதை விடநான் போடுற பால்ல விக்கெட் விழுந்துடக்கூடாதுன்னு போடுறப்ப பல மடங்கு மன அழுத்தம் அதிகமாயிடுச்சுன்னு சொன்னார்.

இந்த வழக்கு விசயமும் அப்படித்தான்... டெக்னாலஜியை பயன்படுத்தி வழக்கம்போல ஒரு க்ரைம் செய்ய பெரிய புத்திசாலித்தனம் தேவையில்லை... துணிச்சல் மட்டும் போதும்...

கூலிப்படையை அனுப்பி நாலு பேர் சொக்கநாதனோட தலையை வெட்டிப் போட ரொம்ப நேரம் ஆகியிருக்காது.

ஆனா, தடயம் கிடைக்காத மாதிரி இவ்வளவு ப்ளான் பண்ணி காரியத்துல இறங்கினதுக்கு வேற முக்கியமான காரணங்கள் இருக்கு...

அவர் கொலை செய்யப்பட்டதா யாருக்கும் சந்தேகமே வரக்கூடாதுன்னு கவனமா இருந்துருக்காங்க... ஏதாவது வாகனம் மோதி விபத்து மாதிரி செட்டப் செஞ்சா கூட, இந்நேரம் வண்டி நம்பர் அல்லது அடையாளத்தை வெச்சு யாருன்னு கண்டு பிடிச்சிருக்கலாம்...

இந்தப் பகுதியில வருஷா வருஷம் பட்டம் பறக்க விடும் போட்டி நடக்குறதையும், அதுல பல பட்டங்கள் அறுந்து வந்து வசந்தம் நகர் மரங்கள்ல சிக்குறது வரைக்கும் கவனிச்சு இந்த மாஞ்சா நூல் மூலமா கொலை பண்ணிடலாம்னு திட்டம் போட்டுருக்காங்க...

எவ்வளவு பெரிய புத்திசாலியா இருந்தாலும் தடயத்தை விடாம போக மாட்டாங்கன்னு நமக்கு சொல்லிக் கொடுத்தது சரியாத்தான் இருக்கு...

முதல் க்ளூ... மாஞ்சா நூல் சென்னையிலதான் அதிகமா புழங்குதே தவிர மற்ற நகரங்கள்ல இதை பயன்படுத்தி பட்ட விடுறவங்க ரொம்ப ரொம்ப குறைவு... அதுலயும் இங்க தஞ்சாவூர்ல யாருமே இதுவரைக்கும் அப்படி செஞ்சது கிடையாது. அதனால சென்னையில யாரோ ஒரு வியாபாரிகிட்ட வாங்கிட்டு வந்துதான் இந்த காரியம் அரங்கேறி இருக்குன்னு நாம ஈசியா கண்டு பிடிச்சுட்டோம்...

ரெண்டாவது, அந்த வியாபாரிங்க கிட்ட மாஞ்சா நூலை நேரடியா வாங்கினா ஆள் மாட்டிக்குவான்னு, ரொம்ப கவனமா அதிகம் சர்க்குலேசன் ஆகாத ஒரு புத்தகத்தை தேர்வு செய்து, அங்க பார்சல் செக்சன்ல வேலை பார்க்குறவனையும், அக்கவுண்ட்டன்டையும் வளைச்சு மாரியம்மன் கோவிலுக்குன்னு தனி ஏஜெண்ட்டுக்கு புத்தகம் போற மாதிரி செட்டப் பண்ணியிருக்காங்க... அந்த பார்சல்லதான் மாஞ்சாநூல் மட்டுமில்லை... இவங்களோட கடிதப் போக்குவரத்தே நடந்துருக்குன்னுங்கறது என்னோட யூகம்.

இவ்வளவு எச்சரிக்கையா திட்டம் போட்டு ரொம்பவும் முன் ஜாக்கிரதையாத்தான் இருந்துருக்காங்க... அப்படி அதீத முன்ஜாக்கிரதையா இருந்ததாலதான் இப்போ மாட்டிக்கிட்டாங்க...’’

‘‘ரொம்ப முன் ஜாக்கிரதையா இருந்ததாலதான் மாட்டிகிட்டாங்களா... என்ன மல இப்படி ஒரு கதை சொல்றீங்க...?’’ என்ற நல்லதம்பியின் குரலில் ஆர்வம் அதிகமாகவே தெரிந்தது.

வழியில போன் வந்தது சென்னையில இருந்துதான். மாஞ்சாநூல் வித்தவனுங்களுக்கு எதுவும் தெரியலை... ஒருநாள் ஏரியா பையன் ஒருத்தன் சொன்னான்னு வெளி பார்ட்டி ஒருத்தனுக்கு மாஞ்சா நூல் வித்துருக்காங்க... வந்த பார்ட்டி பணம் கொடுத்தப்ப ஏதோ அவன் பாக்கெட்டுல இருந்து பேப்பர் விழுந்துச்சாம்... நூலை வித்தவனுக்கு அந்த நேரம் ஏதோ போன் வந்து அந்த போன்ல பேசினவன் சொன்ன நம்பரை குறிச்சுக்க ஏதாவது பேப்பரை தேடியிருக்கான்.

அப்போ நூல் வாங்கிட்டு போன பார்ட்டி தவற விட்ட அந்த பேப்பரை எடுத்து அழுக்காகி கசங்கியிருந்த பகுதியை கிழிச்சுட்டு மீதமிருந்த பேப்பர்ல போன் நம்பர்  எழுதியிருக்கான்.

ரூமுக்கு போனதும், அந்த நம்பரை அவனோட அழுக்கடைஞ்ச டைரியில எழுதிட்டு, போன் நம்பர் இருந்த பேப்பரை தூக்கி வீட்டுக்குள்ளேயே போட்டுருக்கான்... அந்த லேபிளுக்கும் மாஞ்சாநூல் வியாபாரிங்களுக்கும் இதுக்குமேல சம்மந்தம் இல்லை...

நீங்க சந்தேகப்படுற ஆளையோ, போட்டோவையோ காட்டுங்க... இவன்தானான்னு அடையாளம் காட்டுறேன்னு சொல்றானாம்...

‘‘பார்சல்ல ஒட்டுற அட்ரஸ் ஸ்லிப் ஒண்ணு மட்டும் பிரிண்ட் எடுத்து ஒட்டியிருந்தாங்கன்னா நமக்கு தெரிஞ்சிருக்காது...

ஒரு சிலிப் கிழிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு ரெண்டா பிரிண்ட் எடுத்துகிட்டு வந்துருப்பாங்க போலிருக்கு... ஒட்டினது போக மீதமிருந்த ஒரு சிலிப்பை சுக்கு நூறா கிழிச்சு போட்டுருந்தாலோ, தீ வைத்து கொளுத்தியிருந்தாலோ நம்ம பாடு திண்டாட்டம்தான். அதை பாதுகாப்பா டிஸ்போஸ் பண்ணணும்னுதான் பாக்கெட்டு வச்சிருந்துருக்கான். அவன் ரோட்டுல தவற விட்டது அப்படியே குப்பையோட குப்பையா போயிருந்தாலும் சிக்கல்தான்.

அந்த நேரத்துக்கு ஒருத்தன் போன் பண்ணி இன்னொரு போன் நம்பரை குறிச்சுக்க சொன்னான் பாரு... அங்கதான் ட்விஸ்ட்டே.

அந்த போன்ல பேசினவனுக்கு நம்பரை டைப் பண்ணி மெசேஜ் அனுப்ப தெரியலை. இவனுக்கு கால் அட்டன் பண்ணிகிட்டே அதே போன்ல நம்பரை டைப் பண்ணி சேவ் பண்ண தெரியலை... இது கூட நமக்கு சாதகமா இருந்துருக்கு...

கவனக்குறைவா குப்பையோட குப்பையா போட்ட ஒரு பேப்பர்தான் தடயம் இல்லாம செஞ்ச எல்லா விசயமும் வெளிச்சத்துக்கு வந்துடுச்சு...

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துருக்கு. சனிக்கிழமை சாயந்திரம் சென்னையில நாலு வயசுப் பையன் கழுத்துல மாஞ்சாநூல் சிக்கி இறந்ததும் ஞாயிற்றுக்கிழமை காலையிலயே ரைடு நடந்துருக்கு... அப்ப ரைடு போன போலீஸ்காரங்க அந்த பேப்பரையும் போட்டோ எடுத்தது உன் கண்ணுல சிக்கியிருக்கு. நீ அதை இங்க தூக்கிட்டு வந்துட்ட...’’

‘‘மல... நான்தான் இந்த கேசை முக்கியமான தருணத்துல டர்ன் பண்ணி விட்டுருக்கேன்னு சொல்லுங்க... ’’ என்று சொல்லவும் அண்ணாமலை முறைத்தான்.

‘‘ஓக்கே... சமாதானம்... சமாதானம்... இந்த ஆதார் டேட்டாவை செக் பண்ணி அந்த போட்டோவை காண்பிச்சா தெரிஞ்சுடுமா...?’’

‘‘இவர்தான் போட்டோவே வேறன்னு சொல்லிட்டாரே... இந்த இந்த ஜெராக்ஸ்ல கருகிப்போய் இருக்குறவன்தான் மோகன்குமார். ஆக, வந்தவன் பேர் என்னன்னு இனிமேதான் கண்டுபிடிக்கணும். அமுத அஞ்சல் அலுவலகத்துலயும் நேரடியா விசாரிக்க சொல்லியிருக்கேன்... அங்க கிடைக்குற தகவல் நமக்கு இன்னும் தெளிவான வழியைக் காட்டலாம்...’’

‘‘மல... அப்போ ஆதாரை வெச்சு விழுப்புரம் போனா வேஸ்ட்டா...’’

‘‘வேஸ்ட்டுதான்...’’

‘‘அப்போ நாம என்ன செய்யுறது மல... சீக்கிரமே எண்ட் கார்டு போடலாம்னு பார்த்தா, ரெண்டு ரீல் முடிஞ்சு டைரக்டர் பேர் போடுற மாதிரி மெயின் பிச்சர் இப்பதான் ஆரம்பம்னு சொல்றீங்க...’’

‘‘பிச்சர் ஆரம்பம்னு யாருடா சொன்னா... அனேகமா உன் சட்டை பாக்கெட்லதான் எண்ட் கார்டு இருக்கும்னு நினைக்கிறேன்...’’

‘‘என் பாக்கெட்லயா... என்ன மல சொல்றீங்க...?’’

‘‘அம்மி இடுக்குல எதையோ எடுத்தியே... அதைத்தான் சொன்னேன்...’’

‘‘அட... இதை மறந்தே போயிட்டேனே...’’ என்ற நல்லதம்பி அதை எடுத்து அண்ணாமலையிடம் கொடுத்தான்.

‘‘மல... கவனமா பாருங்க... ஏதோ மியூசியத்துல வச்சு பாதுகாக்குற கண்டிஷன்ல இருக்கு...’’

ஸ்டுடியோக்களில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை ஒரு பாலிதீன் கவரில் போட்டு அதை ஒரு பேப்பர் கவரில் போட்டு கொடுப்பார்களே... அந்த கவர்தான் அது.

ஸ்டுடியோவின் பெயர் பாதிக்கு மேல் கிழிந்து இருந்தாலும், மேலவீதி, விருதுநகர் என்று பின்கோடுடன் தெளிவாக இருந்தது.

அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சென்னையில் இருந்து அந்த காவலர் அழைத்தார்.

‘‘சார்... அமுதஅஞ்சல் பத்திரிக்கை அலுவலகத்துல எடிட்டோரியலும், அக்கவுண்ட்ஸ் செக்சன் மட்டும்தான் இருக்கு. புத்தகம் பிரிண்டிங் செய்யுறது, எல்லா ஊருக்கும் டெஸ்பாட்ச் பண்றது, ரிட்டன் வர்ற லேபிள் பார்சலை வாங்கி, லேபிளை எண்ணி சரிபார்த்து ரிட்டன் புத்தக ஸ்டேட்மெண்ட் கொடுக்குற வேலையை எல்லாம் அவுட் சோர்சிங் முறையில டெய்லி இந்தியா டிஜிட்டல் ஆப்செட் பிரஸ்ல கொடுத்துருக்காங்க...

அமுதஅஞ்சல் அலுவலக ரெக்கார்டு படி தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்கு தனி ஏஜெண்ட் கிடையாது. மோகன்குமார்னு பேர்ல ஏஜெண்ட்டே கிடையாது... பார்சல் செக்சன் ஆளை கஸ்டடியில எடுத்துட்டோம்...

பிரஸ்சுல பார்சல் செக்சன், ரிட்டன் லேபிள் செக்சன்ல இருந்த ஆளுங்களை கைக்குள்ள போட்டுகிட்டுதான் எல்லா தில்லுமுல்லும் நடந்துருக்கு...

கம்பெனியில கொடுத்த லிஸ்ட்டுப்படி உள்கட்டு விபரத்தையும் அந்த பார்சல் செக்சன்லதான் பிரிண்ட் எடுத்து அனுப்பியிருக்காங்க. அதனால சுலபமா இவங்களே மோகன்குமார் பேர்ல ஒரு பார்சலை உருவாக்கி அனுப்பிகிட்டு இருந்துருக்காங்க...

இந்த திட்டத்தை ஏப்ரல் மாசமே ஆரம்பிச்சிருக்காங்க... போன், இன்டர்நெட் உட்பட எந்த மின்னணு தகவல் தொடர்பையும் பயன்படுத்தக் கூடாதுன்னு முடிவெடுத்ததோட, அக்கம்பக்கத்துல இருக்குறவங்க கிட்ட வழிப்போக்குல போன் வாங்கி பேசினாலும் ஏதோ ஒரு நேரத்துல மாட்டிக்க வாய்ப்பு இருக்குறதையும் யோசிச்சிருக்காங்க.

அதனாலதான் ஆகஸ்ட் முதல் வாரத்துல இருந்து புத்தக பார்சல் மூலமா கம்யூனிகேட் பண்ணியிருக்காங்க. கழுத்துல கயிறைப் போட்டு இறுக்கியோ, வேற முறையிலயோ கொலை செய்யுறதுக்கு புத்திசாலித்தனம் தேவையில்லை. ஆனா ரொம்ப சாதாரணமா மக்கள் விபத்துன்னு நினைச்சு கடந்து போகணும்னு திட்டம் போட்டதாலதான் மாஞ்சாநூல் பிளான் நுழைஞ்சிருக்கு.

அதை யார்கிட்டயாவது வாங்கி கொடுத்து விட்டாலோ, தபால், கூரியர்ல அனுப்புனாலோ எதாவது ஒரு இடத்துல மேட்டர் உடைஞ்சு வெளியில வந்துருக்கும்... இல்லன்னா நம்மோட விசாரணையில கூட எதாவது தெரிய வந்திருக்கும்...

கூரியர் பாய், போஸ்ட்மேன்னு யார் மூலமாகவும் உங்களுக்கு க்ளூவே கிடைக்காம போனதுக்கு இதுவும் ஒரு காரணம்.

அந்த சின்னப் பையன் உயிர் போனதும் மறுநாளே பொதுவா நடத்துன ஒரு ரெய்டுல நாங்க கவனிக்காத ஒரு தடயம் இப்போ ஏகப்பட்ட விஷயத்தை நமக்கு வெளிச்சமாக்கியிருக்கு...

அந்த லேபிள்ல இருந்த க்யூ ஆர் கோடுகூட போலிதான். பேப்பர் கசங்கி இருந்ததால அது சாம்சங், விவோ, எம்ஐ அப்படின்னு எந்த போன்லயும் ஸ்கேன் ஆகலை. ஆனா ஒரு சைனா செட்டை வச்சு ஸ்கேன் பண்ணினதும் விக்கிபீடியா பக்கத்துக்கு போகுது சார்.

உண்மையிலயே நம்மள தாண்டி புத்திசாலியாத்தான் சார் யோசிச்சிருக்கானுங்க...

இவங்கிட்ட இப்படி ஒரு வேலையை செய்ய சொன்ன ஆளை அடையாளம் தெரியாதுன்னு சொல்றாங்க... அது உண்மையாவும் இருக்கலாம்... இல்லன்னா முடிஞ்ச வரைக்கும் நம்மகிட்ட பொய் சொல்லலாம்...

இனி நீங்க வந்து விசாரிச்சுக்கலாம்னு எனக்கு இன்ஸ்ட்ரக்சன் வந்துருக்கு சார்...’’ என்று சொல்லிவிட்டார்.

கைது செய்யப்பட்டு உள்ளே இருப்பவர்களிடம் எப்போது வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளலாம். ஆனால், இங்கே கொலை முயற்சியில் ஈடுபட்டவனை சீக்கிரம் கண்டுபிடித்தாக வேண்டும் என்பதால் அடுத்தநாளே விருதுநகருக்கு அண்ணாமலையும், நல்லதம்பியும் சென்று விட்டார்கள். தெருவை வைத்து அந்த ஸ்டுடியோவை கண்டுபிடிப்பது சிரமமாக இல்லை.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment