Tuesday, June 2, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 24

அத்தியாயம் - 24 - மூன்றாம் உலகப்போர்

Image Credit : https://www.psuconnect.in/
ஊரடங்கு காலத்தில் கங்கை நதியின் தூய்மை
  • தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள், வீட்டுக் கழிவுநீர், சிறுநீர் தேக்கம் போன்றவை கலப்பதனால் நீர் மாசடைகிறது. இதன் விளைவு: நரம்புமண்டலம் பாதிக்கப்படுகின்றது, புற்றுநோய் உண்டாகின்றது, மீன்கள் மற்றும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. எ.கா: எண்ணெய், பெட்ரோல், நெகிழி, சலவைத்தூள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளீட்டால் ஏற்படும் மாசுக்கள்.
  • நிலச்சரிவு மற்றும் மணல் அரிப்பு ஏற்படுவதால் நீரின் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. இதன் விளைவு: உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்படுகிறது. ஏரி, நீர்த்தேக்கத் தொட்டிகளில் வண்டல்கள் மற்றும் மணல் துகள்கள் படிவதனால் நீரின் கொள்ளளவு குறைகின்றது. சமுத்திரம் அமிலமாதல், சமுத்திரம் வெட்ப அளவு மாறுபடுதல் ஆகிய விளைவுகள் ஏற்படுகின்றன.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

ஸ்டுடியோ வாசலில் இருபக்கமும் சாய்வாக நிறுத்தி வைக்கக்கூடிய முக்கோண போர்டு. அதில் 2 நிமிடங்களில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து தரப்படும். கலர் ஜெராக்ஸ் எடுக்கப்படும். பேன் கார்டு, ஆதார்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் லேமினேஷன் செய்து தரப்படும் என்று எழுதியிருந்தது.

உள்ளே நுழைந்ததும் அண்ணாமலை, ‘‘இது ஸ்டுடியோவா இல்ல பிரவுசிங் சென்டரா... ஜெராக்ஸ் கடையா...?’’ என்று கேட்டான்.

‘‘நம்ம கடையில எல்லா சர்வீசுமே உண்டு சார்... ஸ்டுடியோ மட்டும் வெச்சு இந்த காலத்துல பொழப்பு ஓட்ட முடியாது... உங்களுக்கு என்ன வேணும் சார்...’’ என்று அவன் சாதாரணமாகத்தான் கேட்டான்.

‘‘விழுப்புரத்துல இருந்த ஒருத்தரோட ஆதார் ஜெராக்சை வச்சு போலியா இந்த ஊர்க்காரனுக்கு நீ ஒரு ஆதார் தயாரிச்சு கொடுத்துருக்க...

இது மட்டும்தானா... இல்ல, தீவிரவாதிகளுக்கே நீதான் சப்ளை பண்றியா...’’ என்று அண்ணாமலை எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக பேசியதும் அவன் அழத்தொடங்கி விட்டான்.

‘‘சார்... தலை வழுக்கை விழுந்தவங்க போட்டோவுல முடி இருக்குற மாதிரி கேட்பாங்க... வருமானம் போனாலும் பரவாயில்லை... அதையே நான் செஞ்சு குடுக்க மாட்டேன்னு சொல்லிடுவேன்... நீங்க சொல்ற மாதிரி போர்ஜரி பண்ற அளவுக்கு எனக்கு தைரியம் கிடையாது சார்...’’ 

அதைக் கேட்டதும், அவர்கள் அனைவருக்கும் ‘சப்’பென்றாகி விட்டது. 

‘‘மல... ஒருவேளை அவன் இந்த ஸ்டுடியோவுல ஏதாவது போட்டோ எடுத்துட்டு போய் அதை இன்னொரு இடத்துல ஸ்கேன் பண்ணி இந்த வேலையை...’’ என்று நல்லதம்பி பேசிக்கொண்டிருக்கும்போதே அண்ணாமலை குறுக்கிட்டான்.

‘‘உன் கடையில வேலை பார்க்குற பொண்ணைத் தவிர வேற யாரையும் விட்டுட்டு வெளியில போவியா...?’’

‘‘ஆமா சார்... அப்பப்போ பசுபதின்னு பிரண்டு பார்த்துக்குவான்... இப்போ அவன் நாலஞ்சு மாசமா ஊர்ல இல்லையே... சென்னையில ஏதோ கட்டிட காண்ட்ராக்டர்கிட்ட வேலை கிடைச்சிருக்குன்னு போயிட்டான்...

போனதுல இருந்து ஒரு போன் கூட கிடையாது...’’

‘‘அவன் வீடு எங்க இருக்கு...?’’

‘‘அவனுக்கு இந்த ஊர்ல சொந்தக்காரங்க யாரும் இல்லை... அவன் அம்மா அப்பா இங்க கூலிவேலைதான் பார்த்துகிட்டு இருந்தாங்க...

ரொம்ப வருஷத்துக்கு முன்னாலயே அவன் அப்பா செத்துட்டாரு... அம்மாவும் போன வருசம் இறந்துட்டாங்க... அவனுக்கு ஒரே ஒரு அக்கா. பேரு மணிமேகலை. அதை ஓசூர்ல கல்யாணம் பண்ணி கொடுத்துருக்காங்க...’’

‘‘அவங்க அட்ரஸ், போன் நம்பர் எதாச்சும் இருக்கா...?’’

இந்த கேள்விக்கு உடனடியாக பதில் சொல்லாமல் சற்று நேரம் யோசித்த அவன், ‘‘சார்... போன வருசம்,  அவன் அம்மா சாகுறதுக்கு முன்னால, மணிமேகலை நாத்தனார் ஜாதகத்தை என் கடை அட்ரசுக்கு அனுப்பியிருந்தாங்க...

அதை ஒரு தரகர்கிட்ட கொடுத்தேன்... அவர்கிட்ட காப்பி இருக்க வாய்ப்பு இருக்கு சார்...’’

‘‘எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற...?’’

‘‘சார்... ஒரு பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சு புள்ளை பொறந்து, அந்த புள்ளை ஸ்கூலுக்கு போறது வரைக்கும் தரகர் ஜாதக லிஸ்ட்டை விட்டு வெளில போகாது சார்...’’ என்று அவன் பதில் சொல்லவும், அவ்வளவு சீரியஸ் மூடில் இருந்தாலும் சிரிப்பை வரவழைத்தது.

அவன் சொன்னபடியே தரகர் அந்த ஜாதகத்தின் நகலினை வைத்திருந்தார். அதில் இருந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என்ற பதிவு செய்யப்பட்ட குரலைத்தான் கேட்க முடிந்தது.

முன்பெல்லாம் முதல் ஐந்து இலக்கத்தை வைத்தே மொபைல் ஆப்ரேட்டர்கள் இவர்கள் என்று சொல்லிவிடலாம்.

தற்போது மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வந்ததால் நேற்று வரை அந்த கம்பெனி. இன்று முதல் இந்த கம்பெனி என்றாகி விட்டது.

நெருக்கி விசாரித்துப் பார்த்தால் தமிழகத்தில் மிகவும் ஆரவாரமாக துவங்கப்பட்டு ஆறே மாதத்தில் மூடுவிழா கண்ட நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நம்பராம். அந்த கம்பெனி மூடப்பட்ட பிறகு வேறு நிறுவனத்திற்கு மாறாமல் விட்டிருக்க வேண்டும். 

இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் இருந்து தகவல் வாங்குவதே பல நேரங்களில் எரிச்சலூட்டும் வேலையாக இருக்கும். இந்த அழகில் மூடப்பட்ட நிறுவனத்தில் இருந்து முகவரியை வாங்குவதெல்லாம் உடனடியாக ஆவுறதில்லை என்ற முடிவுக்கு வந்த அண்ணாமலை, அந்த ஜாதகத்தில் இருந்த முகவரியுடன் வழக்கம்போல் நல்லதம்பியையும் உடன் அழைத்துக் கொண்டு ஓசூரில் தேடுவதற்கு கிளம்பி விட்டான்.

அந்த முகவரியில் மணிமேகலை இல்லை. வீட்டை காலி செய்து கொண்டு போய் ஆறு மாத்திற்கு மேலாகிவிட்டது என்றார்கள். அண்ணாமலையின் உள்மனம், பசுபதி இந்த ஊரில்தான் இருக்க வேண்டும் என்று உணர்த்திக் கொண்டே இருந்தது. அதேபோல் மேலும் ஒருவார தேடுதலுக்குப் பின் மணிமேகலை வீட்டில் தங்கியிருந்த பசுபதியை அள்ளியதுமே உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டான்.

தஞ்சாவூரில் தனி அறையில் வைத்து அவனை விசாரித்தபோது மூன்று நாட்கள் கழித்துதான் வாயைத் திறந்தான்.

பசுபதி கை காட்டிய ஆள் சென்னையில் ஒரு கூலிப்படையில் இருப்பவன். அவனை கைது செய்து விசாரிக்கும் போது அடுத்து, அடுத்து என்று நான்கு ஆட்கள் தாண்டிச் சென்ற பிறகு, ஒரு இடத்தில் நின்றது.

தமிழகத்தில் ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் நடத்தி வந்தாலும், இந்திய அளவில் நம்பர் ஒன்னாக இருக்கும் பாட்டில் குடிநீர் விற்பனை நிறுவனத்தின் பெயரால் குடிநீர் சக்ரவர்த்தி என்று அழைக்கப்படும் ஆதித்யன் அறிவானந்தம்தான் மக்கள் விஞ்ஞானி சொக்கநாதனை கொலை செய்ய ஏற்பாடு செய்தது என்பது தெரிந்ததும் அண்ணாமலை மட்டுமல்ல, காவல்துறை ஐ.ஜியும் அதிர்ந்து விட்டார்.

காற்றினுடைய ஈரப்பதத்தை பிரிச்சு தண்ணீர் தயாரிக்கிற இயந்திரங்களை பலரும் கண்டுபிடிச்சிருக்காங்க... அதனுடைய விலை ரொம்ப அதிகம்... சொக்கநாதன் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான செலவுல வீட்டுலயே இந்த மாதிரி இயந்திரத்தை சுலபமா உருவாக்குற தொழில்நுட்பத்தை கண்டுபிடிச்சுட்டார்... 

அந்த தொழில்நுட்பத்தை மக்களுக்கு இலவசமா கொடுக்க நினைச்சாலும், வேற ஒரு அபாயத்தால அதை அவர் செய்யலை.

ஏற்கனவே ஏசி, பிரிட்ஜ் வெளியிடுற வாயுக்களையும் வெப்பத்தையுமே வளிமண்டலம் தாங்க முடியாம தவிக்குது... 

இதுல காத்துல இருக்குற ஈரப்பதத்தை காலி பண்ணி தண்ணீர் உருவாக்க ஆரம்பிச்சா அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்னு புரிஞ்சுகிட்டு, அந்த இயந்திர கண்டுபிடிப்பை பயன்பாட்டுக்கு கொண்டு வர்றதில்லைன்னு முடிவு பண்ணிட்டார்...’’

‘‘இவரைக் கொன்னுட்டு அந்த ப்ராஜெக்டை வெச்சு லாபம் அடையறதுக்காகத்தான் இந்த கொலை முயற்சியா...?’’

‘‘எக்ஸ்யூஸ்மீ... இன்னும் நான் முடிக்கலை சார்...’’ என்று அண்ணாமலை சொல்லவும்,

‘‘ஓ... சாரி... நீங்க பேசுங்க...’’

‘‘இப்போ கெமிக்கல் கலந்த தண்ணீரை சுத்திகரிக்கிறது ரொம்பவே செலவு பிடிக்கிறதோட பல்வேறு பிராசஸ் கொண்ட மிகப்பெரிய பணி. பணம் ஒதுக்கி அரசாங்கமே செய்ய நினைச்சா கூட அது மிகவும் சவாலான கடுமையான பணி.

ஆனா, சொக்கநாதன் சார் இதுக்கும் ரொம்ப ரொம்ப சிம்பிளா ஒரு வழியைக் கண்டுபிடிச்சுட்டார்... அதை பயன்படுத்தி உங்க வீட்டு பாத்ரூம்ல சோப், ஷாம்பு கலந்த தண்ணீரா இருந்தாலும் சரி... சாயப்பட்டறையில இருந்து வெளிவர்ற தண்ணீரா இருந்தாலும் சரி... எளிமையா சுத்திகரிப்பு செய்து சமையல், குடிநீர் தவிர எதுக்கு வேணுன்னாலும் பயன்படுத்திக்கலாம்...

இந்த தொழில்நுட்பத்தையும் எல்லா மக்களும் எந்த ராயல்டியும் கொடுக்காம அவங்கவங்களே செஞ்சுக்கலாம்னு நாட்டுமையாக்க நினைச்சிருந்தார் சொக்கநாதன்.

ஆத்துல சாயக்கழிவு உட்பட எந்த விஷத்தன்மையுள்ள தண்ணீரும் கலக்காம இருந்தா இயற்கையா மழை, அருவிகள் மூலம் உற்பத்தியாகி வர்ற ஆறுகள்தான் இருக்கும்... அதுக்கப்புறம் குடிநீருக்கு ஏன் பிரச்சனை வரப்போகுது...!

சொக்கநாதன் கண்டுபிடிச்ச இந்த தொழில்நுட்பத்தை பரிசோதனை செஞ்சு பார்க்கும்போது எப்படியோ விஷயம் வெளியில தெரிஞ்சு அவரை விலைபேசியிருக்காங்க... ஆனா அவர் இந்த ரெண்டு தொழில்நுட்பத்தையும் யாருக்கும் விற்க மாட்டேன்... உலக மக்கள் அனைவருக்கும் இலவசம்தான் என்பதில் உறுதியா இருந்துருக்கார்...

குடிநீர், பாதுகாப்பில்லாத குடிநீரை குடிக்கறதால வர்ற வியாதிகளுக்கான சிகிச்சைன்னு எவ்வளவு பெரிய வியாபார சந்தை இயங்கிகிட்டு இருக்கு... அந்த பல்லாயிரம் கோடிக்கணக்கான ரூபாய்கள் வர்ற வழியை அடைக்க வழி கண்டுபிடிச்சிருக்குற சொக்கநாதன் சார் மூச்சை நிறுத்த முடிவு பண்ணிட்டாங்க...

சாலைவிபத்து, கூலிப்படையினரால் வெட்டி கொலைன்னு எல்லாம் அவரோட சாவு நடந்தா பின்னால எப்படியும் விஷயம் வெளியில வந்துடும்னு நினைச்சு, போன், இமெயில், வாட்சப் அப்படின்னு எதையுமே பயன்படுத்தாம ஒரு திட்டம் தீட்டியிருக்காங்க...

பசுபதி பால் பாக்கெட் போடுற ஆள் மாதிரி ஒரு செட்டப்பை ஏற்படுத்திகிட்டு வசந்தம் நகர்ல சுத்தி வந்திருக்கான். அந்த நகர் ரொம்ப பெரிசு... ஏகப்பட்ட தெருக்கள். பால், பேப்பர் போடுற ஆளுங்க எல்லாம் நாலேகால் மணியில இருந்து ஆறு மணிக்குள்ள வெவ்வேறு நேரங்கள்ல ஒவ்வொரு தெருவுலயும் வர்ற நேரம் தினசரி ஒரே மாதிரிதான் இருந்துருக்கு.

அப்படியே வித்தியாசம் இருந்தாலும் அதிகபட்சம் 5 அல்லது பத்து நிமிடம்தான் மாறுபட்டிருக்கு. நாலே முக்கால்ல இருந்து அஞ்சேகாலுக்குள்ள 7வது பிரதான வீதியிலயும், 8வது குறுக்குத் தெரு பகுதியிலயும் யாருமே வர்றதில்லை. அதனால அந்த இடத்துல கிடைச்ச தனிமையை பயன்படுத்தி சொக்கநாதன் சாரோட கழுத்துல மாஞ்சா நூலை சுத்தி இறுக்கிட்டான்.

ரத்தம் அதிகமா வெளியேறுனதால சொக்கநாதன் உடனடியா மயக்கமாகிட்டார். பக்கத்துல இருந்த மரத்துலயும் கொஞ்சம் நூலை சிக்க வச்சப்பதான் பசுபதியோட சைக்கிள் சக்கரத்துல கொஞ்சம் நூல் சிக்கிடுச்சு, அதையும் கத்தியால வெட்டினவன் அந்த நூலை சுத்தமா ரிமூவ் பண்ணிட்டு சைக்கிளை வித்திருந்தா இன்னும் இந்த வழக்கு குற்றவாளி யாருன்னு தெரியாம விசாரணை நடந்துகிட்டே இருக்குற நிலைமை உருவாகியிருக்கும்.

டிசம்பர் மாதத்தைப் பொறுத்தவரை இரவு நேரம் அதிகமா இருக்கும். அதனால ஆறு மணிக்கு பிறகுதான் வெளிச்சம் வரும். சொக்கநாதன் மேல தாக்குதல் நடந்த நேரம் அஞ்சேகாலுக்கு முன்னால. அப்போ இருந்த இருட்டும் பசுபதிக்கு ரொம்ப சாதகமா இருந்துருக்கு.’’ என்று அண்ணாமலை பேசப் பேச உயர் அதிகாரிகள் அனைவருக்குமே அதிர்ச்சியில் சிறிது நேரம் எந்த வார்த்தைகளும் வரவில்லை.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் சொக்கநாதனின் நேரடி வழிகாட்டுதல் பெற்று அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர்களாகவும், இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்கள் அவரது அதிகாரப்பூர்வமான வீடியோக்களை யூடியூப் மூலமாகவும் தெரிந்து கொண்டு உரிய ஆய்வுக்கூடங்களில் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்கள்.

இதனால் சொக்கநாதனை தாக்கிய குற்றவாளிகள் குறித்த விசாரணையின் உண்மை நிலையை மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் தெளிவாக சொல்ல வேண்டிய அரசியல் சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. 

அதனால் முதலமைச்சரே, ரகசியம் காக்கப்பட வேண்டிய ஒன்றிரண்டு தகவல்கள் தவிர மற்ற அனைத்து விபரங்களையும், விசாரணை சென்ற விதத்தையும் நேரடி ஒளிபரப்பில் பேசச் சொல்லி அனுமதி வழங்கிவிட்டார்.

சொக்கநாதனின் கண்டுபிடிப்புகள் பற்றி உயர் அதிகாரிகளிடம் பேசிய அதே உண்மைகளை சொல்லி முடித்து அண்ணாமலை சிறிது இடைவெளி விட்டான்.

பிறகு தொடர்ந்து, ‘‘ஆனா, உண்மை என்னைக்கு இருந்தாலும் வெளியே வரும்னு அவங்களுக்கு புரியாம போயிடுச்சு... இந்த உண்மை வெளியில வந்தது மாதிரியே சொக்கநாதன் சாரும் மறுபடி எழுந்து வருவாரு... அவரோட கண்டுபிடிப்பால உலகம் முழுக்க தண்ணீர் பிரச்சனை தீரும்னு நம்புவோம்...’’என்று அண்ணாமலை பேசி முடிக்கவும், மக்கள் அனைவருமே வியப்பில் பேச்சு வராமல் வாய் பிளந்திருந்தார்கள்.

அதற்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று சொக்கநாதனின் அபார கண்டுபிடிப்பு.

இரண்டாவது, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆதார், பேஸ்புக், வாட்சப், மொபைல் போன் டிராக்கிங் இவை எதுவுமே இல்லாமல் பதினைந்து நாளைக்குள் இவ்வளவு பெரிய வழக்கை முடிவுக்கு கொண்டு வந்த அண்ணாமலையின் புத்திசாலித்தனம்.

***

அன்று மாலை நல்லதம்பி வீட்டில், அண்ணாமலை, நல்லதம்பி, நறுமுகை ஆகியோர் அமர்ந்திருந்தார்கள்.

‘‘மல... இப்பதான் மனசுல இருந்து ஒரு பாரம் இறங்கின மாதிரி லேசா இருக்கு...’’

‘‘க்கும்... அடுத்த கேஸ் வர்ற வரைக்கும்... அப்புறம் மறுபடி இதே மாதிரி ஓட்டம்... வீட்டுல இருக்குறது யாருன்னு பார்க்க கூட நேரம் இருக்காது...’’ என்ற நறுமுகையின் குரலில் சலிப்பு.

‘‘மல... ஆதித்யன் அறிவானந்தத்துக்கு என்ன தண்டனை கிடைக்கும்...?’’

‘‘கேஸ் முடிஞ்சிட்டதா நினைக்கிறியா... இது ஆக்டோபஸ் பிடி கொண்ட பெரிய மாயவலை... என்னுடைய யூகம் சரியா இருந்தா, நாளைக்கே நம்ம ரெண்டு பேருக்கும் இந்த கேஸ்ல இருந்து ரிலீவ் ஆர்டர் கொடுத்துடுவாங்க... அப்புறம் அரசியல் அதிகாரம் என்ன முடிவு செய்யுதோ அதுதான் நடக்கும்...

என்னோட கவலை எல்லாம், சொக்கநாதன் நல்லபடியா எழுந்து சுற்றுச்சூழலையும் எளிய மக்களோட பொருளாதாரத்தையும் காப்பாத்துற கண்டுபிடிப்பை பொது சொத்தாக்கணும்... சாதி வெறி பிடிச்ச ஆளுங்க கிட்ட சிக்காம இருந்து தேவிரஞ்சனியும் முத்துராஜும் நல்லபடியா வாழணும்... அவ்வளவுதான்...’’ என்று சொன்னதும், எதார்த்த நிலை என்ன என்பதை நல்லதம்பியும், நறுமுகையும் நன்றாகவே உணர்ந்து கொண்டார்கள்.

அன்று நள்ளிரவே, சொக்கநாதன் வழக்கிலிருந்து விடுவித்த உத்தரவு வாட்சப்பில் அனுப்பப்பட்டு, அண்ணாமலை, நல்லதம்பி காலையில் பார்க்க வேண்டும் என்பதற்காக காத்திருந்தது.

கதை நிறைவுற்றது.

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment